கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)
கோவைப் பூ
(ஐக்கூக் கவிதை)
வாக்கு செயலெல்லாம்
ஆதியுமாய் அந்தமுமாய் எனைக்
காப்பாய் கணபதியே. (000)
இனிக்கும் வெல்லத்தில்
குழைந்தது புத்தரிசி. அடடே…
வந்தது… தைத்திங்கள். (001)
வேலை செய்வதோ கை
உடலின் எல்லா உறுப்புக்களும்
குடும்பத்தில் மனைவி. (002)
தொட்டி நிறைந்த நீர்
குழாயில் வேகமாய் வெளியேறும்...
ஆடம்பர வாழ்க்கை? (003)
வேலியில்லாத நிலம்
எதற்கெல்லாம் போட்டியும் வழக்கும்-
ஓ... தாவணி முறிப்பு. (004)
அகம் மணக்கும் காதல்
அங்கத்தினர்களுக்குக் குதூகலம்-
மாங்கல்ய முடிச்சு. (005)
வீட்டிற்குள் அழுகுரல்
தெருவில் ஊளையிட்டது நாய்-
பாவம், கொத்தடிமை. (006)
அணைக்கரை உடைந்ததும்
வெள்ளம் வராமல் அடைத்துவிட்டேன்
நிரந்தரமாய்க் 'கசிவு'. (007)
வெளிச்சத்தை விரும்பி
போட்ட திரையையும் விலக்கினேன்-
நடுஇரவில் சுதந்திரம்? (008)
உலகக் காட்சிகளை
கண்கள் மட்டுமா பார்க்கின்றன
கவிதைக்குள் 'கவிஞன்'. (009)
விரும்பிக் கேட்டவைகள்
நிராகரிக்கப் படுவதில்லையே-
பாவம், தூண்டில் மீன். (010)
அண்டமெல்லாம் வண்ணம்
பொத்தானைப் பொருத்தே விளக்கு
சூரிய காந்திப் பூ. (011)
விழியின் ஓரத்தில்
ஓடங்கள்தான் மிதக்கின்றன-
விலைபேசும் 'துடுப்பு'. (012)
அலங்காரமாய்க் கூவம்
நாற்றம் மட்டும் மாறவில்லை
கிராம 'மண்வாசனை'. (013)
வானத்தில் மட்டுமா?
புவியெங்கும் நட்சத்திரங்கள்-
ஓ... மின்மினிப் பூச்சிகள். (014)
பனியின் முற்றுகையை
கதிரவன் மட்டுமா விலக்கியது?
நேரமாகத் 'தானாய்'. (015)
வானத்து வயலில்
அள வெடுத்தா நட்டாள், நிலாப்பெண்-
நட்சத்திர நாற்று. (016)
அலைகள் ஓய்வதில்லை
கடலில் உப்புநீர் உள்ளவரை
ஓ... அரசியல் வாதிகள்? (017)
வளர்ந்ததற்குக் கூலியும்
வளர்வதற்குத் துணையும் கேட்பர்-
வரதட்சணைப் பேய்கள். (018)
அழுகிய பழமாயினும்
அழகாய்ச் சுவைத்திடுவோம்; ஆனால்
எய்ட்ஸ் நோயாளி? (019)
வறுமைத் தாயின் கண்
ஒருமையில் நின்றது தனியாய்-
மீண்டும் ஒரு கண்ணகி. (020)
உலக வீட்டிற்குள்
நாமெல்லாம் குடுத்தனக்காரர்-
விதையிலிருந்தே விதை. (021)
வட்டியில்லாத பணம்
கேட்காமலே வலிந்து கொடுப்பர்-
திருமண அன்பளிப்பு. (022)
அழுக்காகாத மலர்
காற்றில் அதன் கடைசி ஊர்வலம்
ஏக்கத்தின் முடிவு. (023)
வண்டுக்காய் இருக்கும்
பூவில் மகரந்தத் தூள்கள்-
காற்றின் திருட்டுத்தனம். (024)
ஆடை அலங்காரம்
வியர்வையினால் களையவில்லை; ஓ...
பாதுகாக்கும் 'பனியன்'. (025)
மேகப் புத்தகத்தில்
சோகத்தைப் படிக்கும் காற்று-
கண்ணீர் வடித்தால் 'மழை'. (026)
கதவைத் திறந்துவிட்டேன்
வெளியில் இடியும் மின்னலும்... அட-
மனைவி இல்லாத குறை. (027)
மேனித் தடாகத்தில்
மீனின் நல்வரவுப் பலகை-
திருமண அழைப்பு இதழ். (028)
பசுமையான இலைகள்
பிழியப்பிழிய சொட்டும் நீர்-
உன்னத 'ஐக்கூ'க்கள். (029)
முள்ளில் சிக்கிய துணி
பாதுகாப்பாய் எடுக்கமுயன்றேன்-
விரலைக் குத்தும் முள். (030)
முள் குத்தும்போது
எருக்கம் சிலதுளி பால் வடிக்கும்-
துக்கத்து 'வீடு'. (031)
முள்ளில் சிக்கும் குடை
அல்லல்பட்டது கை; அடடே...
கடைசியில் குடைக்குள் வான்.(032)
ஆண்களின் சரணாலயம்
மாநகர்ப் பெண்கள் கல்லூரி
காட்டுத் தேன்கூடு. (033)
முடிந்துக்கொள்ளலாம் என
மிதிலை, இராமனைப் பார்க்கின்றது-
பாவம், சனகன் வில்? (034)
இதுவரை மகிழ்ந்தது அவள்
இனிமேல் மகிழப்போவது அது
கழுத்தில் மங்கல நாண். (035)
முடிவைப் பார்த்துவிட்டு
முன்னதைத் தேடிக்கொண்டிருக்கும்-
திரையரங்கில் துடைப்பம். (036)
உழுத நிலத்தின்மேல்
அழுத்தி நடந்த பாதங்கள்-
பூமிக்கடியில் விதை? (037)
மாணிக்கக் கற்கள்
ஒளியில் மட்டுமா ஒளிர்கிறது-
சிவன் தலையில் பாம்பு. (038)
இரகசியப் பூக்காடு
மகிழ்வூட்டுகின்ற இராகமாளிகை
துள்ளியழும் குழந்தை. (039)
மாதவி நடனத்தால்
கோவும் பொன்னும் பரிசாயின-
கண்ணகி மகள் மேகலை. (040)
இரவுப் பயணத்தை
எதிர்க்கின்றன மின்மினிப்பூச்சிகள்
வேகமாய்ப் பேருந்து. (041)
மலடிக்குக் குழந்தை
சட்டசபைக்குள் வெள்ளைப் புறா?
பாலைவனப் பூக்கள். (042)
அழகாய்த்தான் இருந்தது
வாசலில் வண்ணக் கோலம், அட...
வானத்தில் 'மேகம்'. (043)
மலர்க் கண்ணில் நீர்த்துளி
எதையெல்லாம் சுமப்பார் பெண்கள்-
ஐம்பூதத்துள் நிலம். (044)
இரவெல்லாம் ஆட்டம்
பகலெல்லாம் வாட்டம்; அடடா!
மரப்பொந்தில் 'ஆந்தை'. (045)
பொய்களின் ஊர்வலத்தில்
உண்மைகள் விலைபேசப்படும்-
நீதிக்குத் தண்டனை. (046)
இருள் உண்ட சூரியன்
இவர்களை உண்ண வருவானோ?
இருண்ட மனிதர்கள். (047)
பொறுத்தால் பெறமுடியும்
ஆத்திரக்காரனுக்கு புத்தி?
வற்றிய கிணற்றில் நீர். (048)
விலைவாசி ஏற்றம்
வரைபடத்தில் மட்டும் வீடு
வாழ்க 'மணல்வீடு'. (049)
பூவின் மேல் புழுதி
காற்றின் போக்கிரித்தனம்; அடடே...
மழையில் குளித்ததே பூ. (050)
இலை, சருகானாலும்
உரமாய் மதிக்கப்படுகின்றது
பொதுத்தேர்வில் மாணவர்? (051)
பெட்டி முழுக்கப் பணம்
பூட்டைப் போட்டுத்தான் மூடினேன்-
சுட்டது அகல்விளக்கு. (052)
உடுத்தாத ஆடை
பேழையில் காட்சிப்பொருளாய்
ஈரமாய் மணல்வீடு. (053)
புனலிக்கொடி வீழ்ந்து
மணலை அலங்கரித்து இருக்கும்-
தொடுக்க இ(ல்)லையே நார். (054)
உரம் போட்டு வளர்த்தேன்
நன்றாய்த்தான் வளர்ந்தன மரங்கள்-
அடடே..... விறகுவெட்டி. (055)
பூக்களில் மகரந்தம்
வண்டின் துணையால் மீண்டும் பூ-
ஓ... கள்ளக்காதல்? (056)
உடைந்ததே தண்ணீர்க்குடம்
பள்ளமான ஓட்டுக்குள் நீர்
அரசியல் கட்சிகள். (057)
புயல் காற்றினாலே
பாதை எதுவென தெரியவில்லை-
குத்தி நின்றது முள். (058)
உயர வளர்ந்தாலும்
தென்னைக்கு மண்ணில் உணவு
தாய்க்கென்றும் பிள்ளை. (059)
புல்லாங்குழல் மட்டுமா
எதுவெல்லாந் தருகிறது மூங்கில்-
கூடைக்குள் தேசம். (060)
அரிசி மூட்டைகள்
பசியோடு காவல்காரன்
உல்லாசமாய் 'எலிகள்'. (061)
பிறந்தவுடன் ஊமை
வளர்ந்த பின்பு குருடனாய்-
நன்றி உள்ளது நாய். (062)
உயரே வாழ்ந்தாலும்
தேய்காய் கீழே விழவேண்டும்
சமத்துவம் பேசும் 'மண்'. (063)
பிறவிப்பயன் பெற்றதாய்ப்
பேசிக்கொண்டது கூர் அரிவாள்-
களத்தில் நெல்மணிகள். (064)
உள்ளதிலே ஒன்றி
உயிர்வாழும் ஒழுக்கமுடையவர்
ஒட்டுண்ணி மனிதர். (065)
பழசான காற்றில்
சாக்கடையின் விவகாரங்கள்; உம்...
நகத்துக்குள் அழுக்கு. (066)
புலிகள் பதுங்குவதால்
கோழைகளென்று கருதவேண்டாம்-
அட... உத்தமத் தலைவன்? (067)
பழுத்து இனிக்கும் பழம்
வீணாகாமல் பார்த்திருப்போம்-
மூலையில் தாத்தா? (068)
உள்ளழகை மறைத்து
கண்ணுக்கு மையழகூட்டுவர்
தலையில் வலி நிரந்தரம். (069)
பயன்படுத்தப்பட்டது
அடைவில் வீணாய்த் தூங்குகிறது-
துருபிடித்த கத்தி. (070)
பரந்த ஒற்றுமை
பிரியும்போது தனிக்குழுக்கள்-
சொட்டும் மழைத்தண்ணீர். (071)
ஊளையிட்டது நாய்
இன்னொரு ஜாலியன்வாலாபாக்
குண்டு கலாச்சாரம். (072)
படித்தேன்; அடிக்கோடு
சில இட்டு மூடினேன்; பிரித்தேன்-
வரிகளே என்பாடம். (073)
தேனுண்ட வண்டு
பூவருகே மயங்கி விழுந்தது-
பூக்களின் அரசாட்சி. (074)
பணத்தோட்டம் அழிந்தது
உள்ளே புகுந்தது குள்ளநரி-
பிணத்தின் மீது 'ஈ'. (075)
ஊற்றுள்ள கிணறு
எடுக்க எடுக்கக் குறையாது
ஆற்றிலும் அளந்துபோடு. (076)
நேராய்த்தான் வைத்தேன்
சாய்ந்து வளர்கின்றதே தென்னை-
நிமிராது நாய்வால். (077)
எண்ணத்தின் சமையல்
வாழ்க்கையாய் மிளிர்கின்றது; அட...
அச்சடிக்காத நூல். (078)
நேராய் முளைத்தது செடி
வளர்ச்சியில் எத்தனை கோணல்கள்-
மனிதச் சமுதாயம். (079)
பயணப் படகுக்குத்
துடுப்பு துரோகம் செய்தது. அட...
கட்டைவிரல் எங்கே? (080)
நுழையாத காடு
எழுபத்தீராயிரம் மரங்கள்-
உடலுக்குள் நாடி. (081)
எண்ணமாய் வளர்கின்றது
மனக்கற்பனையில் குருத்து; அட...
இலைகளில் செல்லரிப்பு. (082)
நுனாவும் பூத்ததுவே
வண்டு, மதுவுண்டு களித்தது-
தனியே மகரந்தம். (083)
எல்லா ஆறுகளும்
கடலில்தான் சங்கமம் ஆகும்
ஜாதிச் சுடுகாடு? (084)
நீரில் வீசிய கல்
நீருள் பாசியின் அரவணைப்பு-
தஞ்சம் தரும் குடிசை. (085)
திரிந்த சுண்ணாம்பும்
நீரினால் கிண்ணம்பூ பூத்தது-
பூக்குமோ என் யாக்கை? (086)
நீரிறை மின்சார
நீரிலிருந்துதான் எடுக்கிறோம்; அட...
கொட்டைக்குள் 'விதை'. (087)
எல்லாமும் படித்தான்
சருகுகள் உதிர்ந்து பறந்துவிட்டன
தேர்வறையில் மாணவன். (088)
நிறைகுடம் சுமக்கும் இடை
உடைந்தது குடம், நனைத்தது ஆடை-
நீர்மேல் உதிர்ந்த மலர்? (089)
என் செல்லப்பூனை
தூங்கட்டும் என்றிருந்தேனே...
சமாதியானதே 'அடுப்பு'. (090)
நிறைகுடம் தளும்பாது
உண்மை; பயணத்தில் கூடவா?
அலைபாய்கின்ற 'மனம்'. (091)
நிலவினில் குளிக்கவாசை
நீருக்குள் கண்டேன்; இறங்கினேன்-
தலைக்குமேலே நிலவு. (092)
பிரச்சாரமோயவில்லை
இலைகளின் நுனியில் முரண்பாடு-
போரின் பின் அமைதி. (093)
நிலவின் வரவிற்குத்
தூக்கத்தை விரட்டினேன்; அடடே...
இன்று, அமாவாசை. (094)
என் மனப்பாடங்களை
சரிபார்த்துக்கொண்டிருக்கிறது
புத்தக அட்டைப்படம். (095)
நான்கு திசை வேதம்
சந்திக்கும் இடத்தில் பரம்பொருள்-
அலையின் நடுவே கல். (096)
ஒதுக்கப்பட்டவைகள்
குளித்து மீண்டும் அர்ச்சனைக்கு
வண்டுண்ட மலர்கள். (097)
நான்கும் இணைந்தாலும்
தனியாய்த் தனித்திருக்கும் பெருவிரல்-
தேரில் அச்சாணி. (098)
களையாத மேகம்
காடும் நாடும் கடலாயின-
அடடே.... மோக மண். (099)
நடப்பவை எல்லாம்
உண்மையென்றே நம்புகின்றதே-
பேயாய்த்திரியும் 'மனம்'. (100)
ஒதுக்கி வைத்தாலும்
வீட்டினுள் நுழைந்து விளையாடும்
சுழற்காற்றில் 'குப்பை'. (101)
நற்காலைவானின்
அலங்காரமான நிறப்பாசிகள்-
மேகத்திட்டுகள். (102)
ஓடுகின்ற வண்டியில்
ஓடிக்கொண்டிருக்கிறது மனம்
தொலைக்காட்சிப் பெட்டி. (103)
தேவையெல்லாம் முடிந்ததும்
தனித்துவிடப்படுவதில்லையே-
பெட்டிக்குள் பென்சில். (104)
மோகம் என்பதெல்லாம்
அதன் பொருண்மையில் இருக்கின்றது-
மனத்தளவே வாழ்வு. (105)
தேனீக்கள் கூட்டமாய்ப்
பறந்து வந்தது - ஏமாற்றம்
கிளையில் காகிதப் பூ. (106)
ஓடையின் ஓரம்
ஓடங்கள்தான் மிதக்கின்றன
ஓரக்கண்ணில் நீர். (107)
தூரத்து இருளில்
மகிழ்ச்சியாக ஒலியும்-ஒளியும்
எதிரிகளின் முகவரி? (108)
கண் தூங்குவதற்கு
இறுக்கமாய் மூடிக்கொண்டது இமை
நிலத்திற்குள் 'மண்புழு'. (109)
தெறிக்கும் மழைத்துளிகள்
முள் நுனியில் வழிந்துபோகின்றன-
தற்கொலையின் ஊர்வலம். (110)
நிமிர்ந்து நிற்கும் புல்
நுனியில் ஒளிரும் பனித்துளி. அட....
எங்கும் சூரியன்கள். (111)
துரியோதனர்களாயிரம்
மீளா உறக்கத்தில் கண்ணன்-
பாவம், திரௌபதிகள். (112)
கண்வழிப்படும் காதல்
காகிதத்தில் கொண்டுவந்தேன்
ஆழமான காவியம். (113)
துளிரும் பசும் இலைகள்
காலத்தோடு உதிர்ந்துதிரும்-
உயர் மானிடப் பிறவிகள். (114)
கரையானின் வீட்டில்
வாழ்கின்றதே பாம்பு; அடடா
இருளுக்குள் விளக்கு. (115)
திரைக்கோழி கூவும்
பொழுது புலர வேண்டாமே-
அரசியல் மன்னர்கள்? (116)
மாடியின் விளக்கெல்லாம்
அணைந்தால்தான் குடிசைக்குள் ஒளி-
யானையுண் விளாங்கனி. (117)
திரைப்படக் கதைகள்
சிந்திக்க வேண்டியவைகளே-
வெறும்பால் தயிராகுமா? (118)
கல் போட்ட காகம்
குடத்தில் நிச்சயம் நீர் எடுக்கும்
தேர்வெழுதும் மாணவன். (119)
தன்னுருவில் படங்கள்
எதுவுமே பேசுவதில்லையே-
மழையே உலகின் உயிர். (120)
கள்ளிச் செடியில் முள்
சிக்கிக்கொண்டது நல்லாடை
பதில்சொல்லும் 'ஊழ்வினை'. (121)
தாய்மை துடிக்கிறது
அணிசெய்கிறது குரவின் பூ-
கண்களில் பன்னீர்த்துளி. (122)
பார்வைக்குள் கோலம்
வேர்வைக்குள் கவிதை. அடடே....
வற்றிய 'கானல்நீர்'. (123)
தறியில் நெய்தாலும்
துணிக்குக் குறியீடு அவசியம்-
ஆற்றிலும் அளந்துபோடு. (124)
கனவுப் பல்லக்கில்
நினைவோட பெரும்போராட்டம்
காற்றின் கைகளில் 'நான்'. (125)
அணுக்களைப் பிளந்தாலும்
மூலக்கூறுகள் பிரிவதில்லை-
அட..... உன்னதக் 'காதலர்'. (126)
காலம் மாறவில்லை
எந்தக் கணவன் இறந்துவிட்டான்?
உடன்கட்டையேர் விட்டில். (127)
தரையோடு வெட்டினேன்
அடியில் துளிர்விடத் தொடங்கியது-
வேரில் மரபணுக்கள். (128)
மழை நனைத்த பாதை
தூசு படிந்தது, விடிந்ததுமே...
பணிக்குப் போ(கு)ம் தூசு. (129)
தலைகுனிவு வாழ்வால்
கவலையா? வேண்டவே வேண்டாம்-
அறுவடைக்குகந்த 'நெல்'. (130)
செல்களின் வீட்டில்தான்
மகிழ்ச்சியாய் வாழ்கின்றது பாம்பு-
உயர்ந்த மனிதர்கள். (131)
காலம் மாறவில்லை
தீவிரவாதிகள் அட்டூழியம்
நிணப்போர்வை மக்கள். (132)
சேர்ந்தது களிமண்
நிறம்மாறியது தூயதண்ணீர்-
சவ்வூடு பரவல். (133)
காலையில் பூத்து
மாலையில் உதிர்ந்துவிட்டதே மலர்
கல்லறைக்குள் 'மலர்கள்'. (134)
சுரங்க நடைபாதை
வெறிச்சோடி இருக்கின்றது; அட...
சாலையில் குருதி. (135)
சாய்வாய் முளைக்கும் முடி
வளர்ப்பிலேதான் நிமிரும் படுக்கும்-
ஐந்தின் பலன் அறுபது. (136)
சுவற்றின் அலங்காரம்
எல்லோர் மனதையும் இழுத்தது-
பல்லிதரும் முத்தம்? (137)
காற்றில் காய்ந்துவிடும்
என்றெண்ணி மூடிவிட்டேன்; அட...
எதுகோலில் 'துவாரம்'. (138)
சிந்திக்கத் தொடங்கி
சீக்கிரம் அழிந்துபோக இருந்தேன்-
ஊருடன் கூடி வாழ். (139)
குடிக்கும் சிகரெட்டின்
நுனிச்சாம்பல், உதிர்த்தா உதிரும்?
பொதுவானது 'உயிர்விதி'. (140)
சிரிக்க வைக்குமவர்கள்
உண்மையில் சிரிக்கின்றார்களா-
திரை நட்சத்திரங்கள்? (141)
சாக்கடை ஊர்வலத்தில்
உல்லாசமாய்க் கொசுக்கடிகள்; அட...
நோய்களின் சின்னங்கள். (142)
சாடியில் காகிதப்பூ
தேனை உண்ணவா வரும் வண்டு-
காலம் மாறிவிட்டது. (143)
விதவைக்குத் தாலி
வரப்பிரசாதமாக இருக்கும்,
கணவனாகக் கோவலன். (144)
கோட்டைத் தீர்மானம்
இரவில்தான் நிறைவேறுகின்றது-
சாட்சியில்லா வழக்கு. (145)
குடிசைக்குள் கோபுரம்
பெருக்கப்படாத குப்பைகள்
நம்பிக்கை நாற்று. (146)
கோவலன் கொலையுண்டதால்
கண்ணகி கற்புத்தெய்வமானாள்-
மாதவி, விலைமகளா? (147)
குனிகிறேன் பின் நெளிகிறேன்
நாணத்தால் புனைந்து பொலிகிறேன்
பெண்ணாய்ப் பிறந்துவிட்டேன். (148)
கையளவே பந்து
ஆயிரக்கணக்கில் ரசிகர்கள்-
விளையாட்டு அரங்கம். (149)
மெல்லத் தலைகுனிந்து
நிமிரும்போது.... ஆர்ப்பாட்டம்-
நீலகிரித் தைலமரம். (150)
கொக்கரிக்கும் தவளை
பாம்பின் உல்லாச வாழ்க்கை-
மகிழ்ச்சியின் ஊடுருவல். (151)
குனிந்து நிமிர்கின்றது
கொத்துக்கொத்தாய் அவரைக்காய்
இரும்பு உருக்காலை. (152)
கூட்டு வாழ்க்கையில்
குதூகலம் ஆரோகனம்; அடடா!
தனிமையில் 'ஞானம்'. (153)
கூர்மையான கத்தி
விளிம்பில் இரத்தக்கரை; அடடே...
சிரிக்கும் சாணைக்கல். (154)
கூர் மழுங்கிய கத்தி
பட்டை தீட்டப்படுகிறது-
அந்திக் கதிர்வீச்சு. (155)
தொடர்ந்து கல் எறிந்தேன்
ஏமாற்றம், பொறுமையாக....
அடடே.... விழுந்தது 'கனி'. (156)
குப்பையை மட்டுமா?
தானியக் குவியலையும் சிதைக்கும்-
இரைதேடும் கோழி. (157)
கூவக்கரை வீடு
தினமொரு அலங்காரம் காணும்
அதிகாரிகள் பேச்சு. (158)
குறுக்கிடாமல் இருக்க
பாதை, நடுவில் தடுப்புக்கம்பி-
அடியில் வளரும் செடி. (159)
கொடியில் மணக்கும்மலர்
காற்றால் காற்றும் மணக்கின்றதே
நாற்றாகும் 'பெண்கள்'. (160)
கிணற்றுக்குள் தவளை
எவ்வளவு தூரம் நீந்தும்?
அட... கொட்டைக்குள் விதை.(161)
மயக்கும் வண்ணத்தில்
அட்டையில் சித்திரம், உள்ளே-
அழுகின்றது 'செந்தமிழ்'. (162)
கிளையில் குதித்தது அணில்
எத்தனை இலைகள் சுமையிறக்கின-
மண்ணில் பன்னீர்த்துளி. (163)
கொதிக்கின்ற நீரில்
அரிசியின் கொந்தளிப்பு, ஆவியாய்-
குடிசைப் போராட்டம். (164)
காலில் முள் குத்த
மூளையில் மின்னல் பறக்கும்-
வதந்திகளின் வேகம். (165)
சந்தனமரக்காடு
அகில் எரிக்க, சந்தனம் வீசும்-
பூவொடு சேர்ந்த நார். (166)
காலிற்கு உணவைத்
தலையின் கிரீடம் கொடுக்கும்-
உரமாய் நிற்கும் சுவர். (167)
வேர்க்கும் நிலத்திற்கு
வானம் அழுதேயாகவேண்டும்-
முரண்பாட்டு வாழ்க்கை. (168)
காதில் கேளாஒலி
எனக்கு மட்டுமெப்படி கேட்டது?
எனக்குள் 'மனசாட்சி'. (169)
சமுதாயக் கைகளில்
சத்தியாக்கிரகத் துப்பாக்கி-
எறும்பைச் சுடுவதற்கு. (170)
காப்பாற்ற வேண்டும்
ஆபத்தான உண்மைகள்-
பாவம், சிறைக்கைதிகள். (171)
சாலையில் விழுதுகள்
அவதிப்படுமே பேருந்து-
ஆலமரத்தரசியல். (172)
கழுத்திலே மாங்கல்யம்
வெண்ணாடை எதற்கு உடுக்கிறாள்?
ஓ... பிள்ளைத்தாய்ச்சி. (173)
பாதம் குத்திய முள்
முறைதவறி செல்லும்போது-
கைக்குள் சிறைபடுமா? (174)
களைகின்ற சுவடுகள்
இளவேனிற் காலம்; பாவம்....
மணல், என்ன செய்யும்? (175)
சாலையைப் பார்த்தா
விழுதுகளின் வீரியம்; அடடா!
நாட்டில் மக்களாட்சி. (176)
கரங்களில் கடிகாரம்
எல்லாமும் நேரத்தைக் காட்டும்
உப்பில்லா பண்டம்? (177)
சிவக்கும் தாம்பூலம்
தெருவில் துப்பிச் செல்கின்றான்-
கண்ணகி விழிக்கவில்லை. (178)
கருப்பாக இருந்தாள்
மனைவியாக ஏற்க மறுத்தேன்-
சுட்டது அகல்விளக்கு. (179)
கவிதையில் அமர்ந்தது 'நிலா'
எல்லோரும் புகழ்ந்தே பாடுவர்-
கவிதைக்குள்ளே 'நான்'. (180)
கண்ணாடிக் கடையும்
புயலில் அகப்பட்டுக்கொண்டது-
கோட்டைக் காவல்? (181)
சிறிது நேரந்தான்
மூக்கைத் துளைத்தது துர்நாற்றம்-
நாவினாற் சுட்ட வடு? (182)
கண்ணாடிப் பெட்டியில்
அலங்காரமாய் வீற்றிருக்கின்றது-
நமைச்சுமக்கும் செருப்பு. (183)
செடி கொடி மரங்களென்று
எதிலும் வேறுபாடு இல்லை-
மனிதரில் இனக்கலப்பு? (184)
ஒற்றுமையாய் வானம்
மகிழ்ச்சியோடு மண்ணில் வெள்ளம்-
பாவம், மண்-மணலாய். (185)
மேகத் திட்டுக்குள்
மோகத் திரைகள் சிரிக்கின்றன-
விலைபேசும் 'அடுப்பு'. (186)
ஒன்பான் சுவை ஒன்றில்
இனிக்க இனிக்க உறவாடும்-
பிள்ளைத்தமிழ்ப் பாட்டு. (187)
செடியில் பழுத்த பழம்
இனிக்கவே நித்தம் துடிதுடிக்கும்-
இல்வாழ்வில் 'மனைவி'. (188)
ஏர்-கலப்பையா என்?
எறும்பின் சிறுகால்கள்; அடடே...
முயற்சியில் புரளுமே 'மண்'. (189)
சேற்றிலே வாழ்ந்தாலும்
தாமரைதானே தேசியமலர்-
சிப்பிக்குள் முத்து. (190)
ஏழு வண்ணங்கள்
வானத்து வெண்மைக்குள்; அட...
பெண்மையின் குணக்குன்றுகள்? (191)
வெறுக்கத்தக்கவைதான்
ஒதுக்கினும் ஒதுங்கவில்லை, அடடா!
உடம்போடு 'அழுக்கு'. (192)
எழுதாத எழுதுகோல்
ஊற்றிய மை தீர்ந்துபோனது-
காற்றில் அதன் எழுத்து? (193)
சேற்றிலே வாழ்ந்தாலும்
தாமரைதானே தேசியமலர்-
ஓ... காகிதப் பூக்கள்? (194)
எழுதி முடிந்தவுடன்
தீர்ப்பு கிடைத்துவிடுவதில்லை-
விடைகொடுக்கும் விமர்சனம்.(195)
தலைவர் வந்துவிட்டார்
பூமாலைகள் அணிசெய்தன-
குப்பையில் மாலை. (196)
எத்தனை முறை படித்தேன்
புரியவில்லை, என்ன செய்வது?
கிழிந்ததே நல்லபுத்தகம். (197)
நிர்வாணத் தறிகள்
தரணி எங்கும் பிரவாகம்-
நெசவாளியின் 'அடுப்பு'? (198)
எப்படி இருந்தாலும்
உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும்-
சந்நியாசித் தவளை. (199)
தலைவிரித்த தென்னை
வாழ்விழந்து பட்டுபோனது-
பெண் கையில் துடைப்பம். (200)
எங்கோ வெடித்தது வெடி
பறந்து ஓடியது காக்கை-
வாழ்க்கை - மௌன வெடி. (201)
தனித்தனிக் குழுக்களாகக்
குளத்தில் சேர்ந்தது மழைநீர்; ஓ...
செம்புலப் பெயல் நீரா? (202)
எங்கோ வைத்த விரல்
என்காதைத் துளைக்கும் செய்திகள்-
வளம்வரும் தொலைபேசி. (203)
சமூக அமுதசுரபி
இன்னும் வற்றவில்லை. அடடே....,
நாட்டின் 'மக்கள்தொகை'. (204)
ஊறினாலே துப்பத்
தேவையான எச்சில் வரும்-
உள்ளத்துணர்வின் பசை. (205)
தனித்தனி முகவரிகள்
கட்டுக்குள் ஒன்று சேர்ந்தன-
நாடாளு மன்றம். (206)
ஊர்ந்துபோன பெருமழை
தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில்-
அடர் வனப்பிரதேசம். (207)
தான்வாழ இணையும்
மின்சாரத்தைத் தொடமுடியா(து)-
நீரிறைக்கும் கருவி? (208)
உலர்ந்து உதிர்ந்த இலை
பாழுங் கிணற்றுப் பிரதேசம்-
சிலந்தியின் விசுவாசம். (209)
நீர் நிறைந்திருந்தால் 'குளம்'
நீர் குறைந்திருந்தால் 'குட்டை', அட...
வானம் பொய்த்தாலோ 'திடல்'.(210)
உலவுகின்ற நெய்யை
மத்தால் கடைந்தாக்கும் ஆயர்-
வேதங்கள் நான்கு. (211)
திக்கற்ற வீடு
திருடன், திருடவா செல்கின்றான்-
பாழடைந்த மாளிகை. (212)
உதிர்கின்ற மலர்கள்
செடிக்கு உரமாய் மாறுகின்றன-
உதிர்ந்தவிடத்துப் பூ? (213)
தினம் குனிந்துகுனிந்து
கேள்விக்குறியானது முதுகு-
பணிவாய் ஒலிபெருக்கி? (214)
உதிர்ந்த சருகுகளை
ஆற்றங்கரையில் வீசிவிட்டேன்-
எறும்பின் நதிப்படுக்கை. (215)
ஏராளமாய்க் கொடிகள்
எண்ணிக்கையில்லாக் கடசிகள்
இரா(வில்) விட்டில் பூச்சிகள். (216)
இன்றைய மருமகள்
நாளைய மாமியார்; அட...
அடுப்படி உபதேசம். (217)
தீராத ஏக்கம்
திருப்புமுனை வாசகம்; அடடே...
கண்ணில் நெருப்புத்துகள். (218)
ஈரமான துணிதான்
பிழிய, அழுக்கை வெளியேற்றும்-
பெண்ணின் அழுக்குமழை? (219)
துளிர்விடுவதற்காக
எத்தனை, இலைகள் சருகுகளாய்-
சமுதாயப் புரட்சி. (220)
இருப்புப் பாதையில்
பேச்சுவார்த்தை வெற்றி பெற்றது-
இரயில் தண்டவாளம். (221)
மோகக் கூந்தலில்தான்
தாகம் பந்தல் போடுகின்றது
குடிகாரன் பேச்சு. (222)
இரைதேடுங் கோழி
குப்பையைச் சீரழிக்கின்றது-
முட்டைக்காய் மக்கள். (223)
தூக்குக் கயிற்றின் முடி
அவ்வப்போது தளர்த்தப்படும்-
தண்டச் சமுதாயம். (224)
இரவில் ஆட்சிசெய்தவள்
விடிந்ததும் ஓடிவிட்டாள்; எப்படி?
ஓ... கனவு வாழ்க்கை. (225)
தென்றலின் விசுவாசம்
தேன்சுவை கனிகளின் உல்லாசம்-
காற்று-பணப்பாசம். (226)
இரவில் பிறந்துவிட்டேன்
வெளிச்சத்தில் வாழ்வதற்காக-
பாலில் உலாவும் 'நெய்'. (227)
படுதாப் போர்வைக்குள்
முகக்கோலம் காட்டும் மாந்தர்-
கண் மூடிய 'பூனை'. (228)
ஆர்ப்பாட்டமாய் வாழ்ந்தவன்
வயது முதிர்ந்து படுக்கையில்-
நீர்நிறையும் குடத்தொலி. (229)
தென்னை மரத்தின் நிழல்
மாடியைச் சுத்தம் செய்கின்றது-
தூசு களையவில்லை. (230)
ஆழத் தோண்டினால்தான்
குடிப்பதற்கு ஊற்றுநீர் கிடைக்கும்-
உலகத்தில் 'பரம்பொருள்'. (231)
தொடர்ந்து நெய்தாலும்
துணிக்குக் குறியீடு அவசியம்-
வரையறுத்த வாழ்க்கை. (232)
ஆசான் இல்லாத
பள்ளிக்கூடங்கள்; அடடே...
நீரில்லாக் கிணறு. (233)
கலங்காத ஒற்றுமை
முட்டைக்குள் வெள்ளை, மஞ்சள்...
அடடே... கூழ்முட்டை? (234)
ஆசையின் தோரணங்கள்
திக்கெல்லாம் காற்றின் போக்கு-
ஓர் இடத்தில் முடிச்சு. (235)
தொல்லையே தந்தாலும்
எப்பொழுதுமே விடமாட்டார்; அட...
முள்ளுள்ள ரோசா. (236)
அழவும் முடியவில்லை
அடிக்கவும் முடியவில்லை; பாவம்
கருவறையில் குழந்தை. (237)
நிர்ணயிக்கப் போவதும்
நிச்சயிக்கப்படுவதும் அவர்கள்-
திருமணத்தில் அய்யர்? (238)
அழித்தா விடுகின்றோம்
விரட்டி மட்டும் விடுகின்றோம்-
சோற்றின் மீது 'ஈ'. (239)
கடல் மட்டும் அலையா?
நீருள்ள இடமெல்லாம்-அட....
குப்பிக்கேற்ற மூடி. (240)
அரிசி கழுவிய நீர்
தினந்தினமுஞ் சேரப் புளிக்கும்-
மாட்டுக்குத் தண்ணீர். (241)
நாடக அரங்கத்தில்
துரியோதனர்கள் நடிக்கிறார்கள்-
எரிகின்ற வீடு? (242)
அலங்காரச் சுவரில்
அமர்ந்திருக்கும் சிறு கண்ணாடி-
நடுத்தெருப் பிள்ளையார். (243)
குறுக்கத்தரித்த உரு
காட்டாற்று வெள்ளம்; அடடே...
ஐக்கூக் கவிதைகள். (244)
நிமிர்ந்தால் தலைபடுமென
சாய்ந்திருக்கும் நாற்றுகள்-ஆம்...
மணக்கோலத்தில் 'பெண்'. (245)
பூவை நாடும் பூ
பறிப்பதால் பூவிற்கு வாட்டம்-
செடியில் இருந்தாலும்.? (246)
நிலக்கடலையில் எண்ணை
காய்ந்த பின்பே எடுக்கவேண்டும்-
மழலையர் திருமணம்? (247)
நிழலான வாழ்க்கை
நிஜமாவதாய் உணர்வின் அலைகள்-
திரையரங்கில் 'மக்கள்'. (248)
சுவரில் கண்ணாடி
சுவரைக் காட்டுவதில்லை-அட ...
உனக்குள்ளே ஒருவன். (249)
நிழலில்லாத இடம்
மழைபெய்தால் முற்றும் நனையும்-
திறந்தவெளி ஊர்தி. (250)
நினைத்ததையே நினைத்து
நினைந்துருகும் மக்கள் கூட்டம்-
மாவறைக்கும் எந்திரம்? (251)
அந்தரத்தில் மனிதன்
மேலும் கீழும் ஆபத்து...
மகிழ்வான 'வாழ்க்கை'. (252)
நினைவுச் சின்னங்கள்
யாருக்காக எழுகின்றன-
நெஞ்சில் ஓர் ஆலயம்? (253)
நீரைத் தேக்குதற்கு
விளைநிலம் பாழானது; அடடா...
வறண்டுவிட்ட ஏரி? (254)
அடங்காத இதயம்
இமைகள் மூடியும் அடங்கவில்லை...
கனவின் 'சிம்மாசனம்'. (255)
நீர் தந்ததற்காகத்
தன்னையே தியாகம் செய்யும்-
தோட்டத்து 'வாழை'. (256)
நூலாகும் பருத்தி
செய்யும் போதும் வீணாகும்-
பட்டறையில் மரத்தூள். (257)
என்னமாய் வளர்கின்றது
மனக்கற்பனையில் குருத்து-அட....
இலைகளில் செல்லரிப்பு. (258)
நெஞ்சில் அக்கினிக்குஞ்சு
முரசு கொட்டிச் சிரிக்கின்றது-
தன்மானத் தாய்மகள்? (259)
பகடைக்காய் ஆட்டம்
காயைப் பக்குவமாய் நகர்த்தினேன்-
தாயம், அதன் கையில். (260)
ஒற்றுமையாய் இருந்தது
வானத்தின் மகிழாரவாரம்-
பாவம், மண்-மணலாய். (261)
பகலின் சிதறல்கள்
பதுங்கியிருந்து வெளியாகும்-
இரவு நட்சத்திரம். (262)
பதர்தூற்றி வெய்யிலில்
காய்ந்த நெல் கோணிக்குள்; ஆம்...
உழவனுக்காகப் பதர். (263)
வானில் பறவைகள்
ஒற்றுமையாய்ப் பறக்கின்றதே-அட
வழி-மேடா? பள்ளமா? (264)
பதிபசு பாசமெல்லாம்
சைவசித்தாந்தக் கருத்துகள்-
உருண்டையாய் 'உலகம்'. (265)
பலநாள் முயற்சியினால்
புல்லை வட்டமிடும் மழைநீர்-
தீராத தாகம். (266)
குளிர்ந்தால் பனிக்கட்டி
விரிந்தால் தன்னெடை குறையும் நீர்
கன்னியர் ஆசைகள்? (267)
பவவழிப் பாதைகள்
சேருமிடத்தில் முள் குத்தும்-
மதிலின்மேல் அரசியல். (268)
பாதம் கடித்தாலும்
என்றைக்கும் விடுவதில்லை; அட...
நமைச்சுமக்கும் செருப்பு. (269)
தென்னைக்கும் நெற்கும்
ஏற்றத்தாழ்வு அததற்கி(ல்)லை-
மனத்தளவே வாழ்வு. (270)
பார்ப்பதற்கே கண்கள்
கசங்கவும் கசக்கவும் அல்லவே; அட
அழுக்கில்லாத கை. (271)
புதியதாக வாங்கினேன்
அதற்குள்ளா, இப்படி கிழிந்தது-
முள்ளில் சிக்கிய துணி. (272)
தோல் செருப்பானாலும்
ஊசியால் குத்தியே ஆகவேண்டும்
மழையும் இடிமின்னலும். (273)
புதையல் அகப்பட்டது
மகிழ்ச்சி, ஆனால் வெற்றுக்குடம்-
ஓ... காதலியின் 'மனம்'. (274)
புவியீர்ப்பு விசையால்
புரளாமல் இருக்கிறது நிலம்-
மாறாத கைவிரல். (275)
நாணத்தின் விளைச்சலால்
நல்வாழ்க்கை கிடைத்துவிட்டது; அட....
வானம் பொழிகிறது. (276)
புள்ளியில் நிறைவின்மை
எத்தனை எத்தனை எழுத்திற்கு-
மனிதப் பேராசை. (277)
பூத்திருக்கும் சோலை
உண்டுருண்டு செல்லும் வண்டுகள்-
கூந்தலில் அழகாய் 'மலர்'. (278)
நான்கு திசை வேதம்
பரம்பொருளே மூல கர்த்தா-
புள்ளியில் நிற்கும் கரு. (279)
பூ பூத்த நேரம்
புவியெங்கும் வெண்மை தெரிந்தது-
ஆந்தைக்குள் 'உலகு'. (280)
பெண்ணால் வரும் சண்டை
உடல்முழுக்கச் சிவப்புக் கண்கள்
வெகுளியாய்ச் சிரிக்கும் அவள்? (281)
இருண்ட வீட்டிற்குள்
ஒளி(ர்)ந்திருக்கும் மின்மினிப் பூச்சிகள்
விபச்சார விடுதி. (282)
பெரிய கல்லையுருட்டும்
கடப்பாறை ஒரு நெம்புகோல்-
அடிதாங்கும் சிறுகல். (283)
மகனை விற்றுவிட்டு
மகளின் நிச்சயதார்த்தம்; அட...
கரம்பு நிலத்தில் நெல். (284)
பகடைக்காய் ஆட்டம்
வெற்றிதோல்வி நிரந்தரமில்லை
வாழ்வில் இன்பதுன்பம். (285)
மணலைச் சீண்டிவிட்டேன்
காற்றில் போருக்குப் போனது-
அடைக்கலம் தந்தது மழை. (286)
மறுநாள் உணவிற்காக
நுனிப்புல் மேய்ந்தது ஆடு; அட....
நம்ம வழக்குரைஞர். (287)
பத்திரிகைப் பூக்கள்
காலையும் மாலையும் வரும்
வண்டுகளாய் 'வாசகர்'. (288)
மனதைத் திருடினாலும்
மறைக்காமல்தான் நிற்கின்றது-
கடைக்கூண்டில் பொம்மை. (289)
மிகப்பெரிய உருளை
சிறிய கல் தடுத்து நிறுத்தும்-
எதற்கெடுத்தாலும் 'பெண்'. (290)
பல் மறைக்கவா உதடு
சொல் தவறினால் கடிபடும் நாக்கு
அழகே ஆபத்து. (291)
மின்சாரப் பெட்டியில்
எப்பவும் சிவப்புநிற விளக்கு-
கன்னிகளின் கண்கள். (292)
முதிர்ந்து தான் உதிரும்
உதிர்ந்த பின் புதியதாய் ஆகும்-
அட... தென்னந்துடைப்பம். (293)
பிறருக்குத் தன்னை
அர்ப்பணித்துக்கொண்டு வாழ்ந்தேன்-
வாழை மரமாய் 'நான்'. (294)
முந்திச் சென்றாலும்
புகைமட்டும் பிந்தியே செல்லும்-
வேகமாய்ப் புகைவண்டி. (295)
மூக்கறுத்த கத்திக்கு
முனையிலே இரத்தம் மிளிர்கின்றது-
மனம் ஓர் 'கிளிக்கூடு'. (296)
முள் குத்தியவுடனே
இரத்தமும் அழுக்கும் சேர்ந்தே வரும்
முள் நுனியில் அழுக்கு. (297)
மூக்கறுத்த கத்தியின்
கூர்முனையில் குருதி ஓட்டம்-
மூச்சு நிற்கவில்லை. (298)
யாரும் அழைக்காமல்
எப்படி நான் மகாத்மாவானேன்-
மலரொடு சேர்ந்த நார். (299)
விளைந்த விளைச்சல்கள்
எப்பவுமே வீணாவதில்லை
ஓ... மனிதன் மட்டும்? (300)
யார் கட்டியது சிறை
தென்றல் பட்டதும் விழுந்துவிட்டதே-
கடப்பாறைப் பெண்மனம்? (301)
வம்சங்களின் இறகெலாம்
காற்றில் பறக்கும் மலராச்சு-
காற்றுக்கெது 'வேலி'. (302)
பருக்களை வேரோடு
கிள்ளி எறிகின்றோம்; முகத்தில்....
அழியாத தழும்பு. (303)
வயிறே வற்றினாலும்
வற்றாதே மாநகர்ச் சாக்கடை-
அலங்கார 'ஊர்வலம்'. (304)
வாமன அவதாரம்
பெயரைச் சொல்லவில்லை; அடடே
எறும்புக்கே 'சாதனை'. (305)
வானமெப்படியாயினும்
சூரியன் வரத் தவறுவதில்லை-
குறுக்கே 'இடைத்தரகர்கள்'. (306)
வாய்மையே வெல்லும்
ஆமாம்... ஆயிரத்தில் ஒரு சொல்-
பொய்ப்பாராளுமன்றம். (307)
வான்திரை ஓட்டைகள்
மோகக் கவிக்கு நட்சத்திரம்-
வறுமைத் தாவணிகள். (308)
விடுகதைக் குடிசை
மின்மினிப் பூச்சிகளாய் விளக்குகள்-
கல்லறையில் தியாகி? (309)
விளக்கின் வெளிச்சத்தில்
பல உண்மைப் பிரதிநிதிகள்-
பொய்களின் 'முக்காடு'. (310)
சோறு பொங்கியதால்
சோற்றுக்காச் சொந்தம் சட்டி
குழம்புக்கும் 'சட்டி'. (311)
விளக்கைப் போட்டதுமே
காணாமல் போய்விட்டது இருள்
மின்சாரக் கனவு? (312)
வெள்ளை அடித்தசுவர்
தினந்தினமும் கரும்புள்ளிகள்; ஓ...
பால்காரன் கணக்கு. (313)
நிலவுக்கும் மூன்றுநாள்
எப்படியது சாத்தியமாகும்
இன்று 'அமாவாசை'. (314)
வெள்ளையடித்த சுவர்
ஒருநாள் இரவு தூங்கிவிட்டேன்-
சுவர் முழுக்க விளம்பரம். (315)
வேறுபட்டிருந்தாலும்
தற்காப்பில் ஒன்றும் விரல்கள்-
அட... தேர்தல் கூட்டணி. (316)
வெளிச்சமில்லாப் பாதை
கொலைகளுக்குக் குறைவே இல்லை-
எறும்புகளின் ஊர்வலம். (317)
புள்ளிவைத்த கோலம்
வண்ணம் மட்டும் கொடுக்கவில்லை
அடியில், 'சிவந்த மண்'. (318)
விழுந்ததும் ஒட்டியமண்
எழுமுன் துடைக்கச் சென்றது கை-
ஒளியை மறைக்கும் இலை. (319)
வானில் பறவைகள்
ஒற்றுமையாய்ப் பறக்கின்றன; அட...
பாதையே இல்லை. (320)
அழுக்குக் கைக்குட்டை
துவைத்து மீண்டும் பயன்பாட்டில்
பிணத்தின் புத்தாடை? (321)
வாசிப்பிலே படியும்
காற்றில் பறக்கும் பனித்துளிகள்-
தேர்தலில் பதுக்கல் பணம். (322)
குத்தும்போது வலி
கூர்மையாகத் தெரிகின்றது-
உன்னத 'ஐக்கூ'க்கள். (323)
வந்ததற்கு அழுகிறாய்
நாங்களோ, வாழ்வதற்கே அழுகிறோம்-
அழுகை மட்டும் 'பொது'. (324)
முகம் பார்க்கும் ஆடி
உள்ளதை உள்ளபடி காட்டும்
அகத்தின் அழகே 'முகம்'. (325)
மையக் காட்டில் மழை
காடு கடலாய் மாறும்-
செல்வத்துட் செல்வம். (326)
முன்னரே மதிப்பிட்டதை
மறுமதிப்பும் செய்கின்றோம்; ஓ...
உதிரி பாகங்கள். (327)
இருளில் வெண்ணாடை
நிறம் மாறாமல் தெரிகிறது
வெளிச்சத்தில் மட்டும்? (328)
முதலுதவிக்காக
பேச்சு வார்த்தை நடக்கிறது-
வியாபார மக்கள். (329)
மாலை காலையில்
சுறுசுறுப்பாக இயங்குகின்றது-
பணிக்குப் போகும் 'பை'. (330)
அழுக்குக்குப் பயந்து
நகத்தை ஒட்டவொட்ட வெட்டினேன்
நகப்பொந்தில் 'இரத்தம்'. (331)
மழையுடன் வாழும் பெண்
சிறு பேச்சால் பூகம்ப வெடி-
சிலம்பிடையே மாதவி. (332)
மகரந்தத்தூள்கள்
வண்டுக்காய்க் காத்திருக்கும்; அட...
காற்றின் திருட்டுத்தனம். (333)
முள் இரண்டும் இணைந்து
ஓடினால்தான் கடிகாரம்; ஓ...
இரு வருவாய்க் 'குடும்பம்'. (334)
பெண்கள் எத்தனைவிதம்
ஒவ்வொருவரிடமும் ஒரு முகவரி-
காட்டுக்குள் மூலிகை. (335)
பூத்தது எருக்கம் பூ
அழகாய், விட்டு வைக்கவில்லை-
பெரியார் பிரச்சாரம். (336)
பரந்த புல்வெளியில்
தினந்தினமும் நடந்து வந்தேன்
ஒற்றையடிப் பாதை. (337)
புல்லின் வைரத்தலை
பனித்துளி மட்டுமா தருகின்றது?
செடிக்குப் பாய்ச்சும் நீர். (338)
பீதாம்பரம் வீசும்
கன்னிப்பெண் - நெஞ்சக்குமுறல்
ஓ... புழுங்கல் அரிசி. (339)
உய்வித்துண்பாரும்
உய்த்துண்பாரும் பயனடைவர்
பாவம், 'தினக்கூலிகள்'. (340)
பாத அடிச்சுவடு
புதுச்செருப்பில் நன்றாய்த்தெரியும்-
புதுமனைவி கோலம். (341)
பலநாள் பற்பலமுறை
பாறைமீது நடந்துவந்தேன்-
என்பாதச் சுவடுகள். (342)
மிகப்பெரிய குளம்
ஊருக்குள் சாதி வெறிப்பேய்கள்
குளிக்கின்றது 'எருமை'. (343)
பணிவதே பெருமையென
வயலில் குனியும் நெற்கதிர்கள்-
உலையில் நிமிரவேண்டும். (344)
நொண்டி வண்டுக்கு
எல்லா மலர் மீதும் ஆசை-
அக்கரையில் குறிஞ்சி. (345)
ஆடம்பர வாழ்க்கை
வரவுக்கு மேலே செலவு
நெய்விளக்கில் 'விட்டில்'. (346)
நுனியை மேய்ந்ததாடு
அடியோடு வாடியதே செடி-
அரசியல் தலைவர்கள். (347)
நீருக்குள் நிலவு
இறங்கித் தேடினேன்; காணவில்லை-
தலைக்குமேலே நிலவு. (348)
உயரே வளர்ந்தாலும்
மண்ணுக்கு நிழலைத்தரும் 'மரம்'
நாடோடி 'வீடு'. (349)
நிறைய பனை, தென்னை
இதமாய இருந்தது கோடை-
மதுவுண்ட வண்டு. (350)
நிலா முற்றத்தில் நெல்
நிலவில் காய வைப்பதில்லை-
முரண்பாட்டு வாழ்க்கை. (351)
உருண்டையாய் உலகம்
பரந்த கடல்நீர் வழிவதில்லை
திருத்தொண்டர் 'அன்பு'. (352)
நிமிராத நாய்வால்
நிமிர்த்தினாலும் சுருட்டிக்கொள்ளும்-
மலரோடு சேர்ந்த நார். (353)
நற்கொழுமுகை உடைந்து
திணிநிலைக் கோங்கம் அணிசெய்தது-
வண்டு வரவில்லை. (354)
நிலத்திற்குள்ளதுபோல்
மனிதனுக்கும் உண்டு பட்டா
அடடே.... வரதட்சணை. (355)
தேனுள்ள பூக்கள்
அர்ச்சனைக்குப் பறித்துவிட்டார்கள்-
வண்டின் தவிதவிப்பு. (356)
தென்றலால் மயங்கிய நான்
நினைவு வர வருந்துகின்றேனே-
பறக்கின்றன பூக்கள். (357)
மலையைத் தொடும் வானம்
தூரத்தில் மண்ணையும் தொடும்
வானம்போல் 'பரம்பொருள்'. (358)
துளிர்த்தது இரண்டு இலை
எத்தனை, முதிர்ந்துகாய்ந்துதிர்ந்தன-
உலகில் மக்கள் தொகை. (359)
தினந்தினங் கைரேகை
பார்த்துப்பார்த்து அலுத்துவிட்டது-
உதட்டில் அட்சரேகை. (360)
ஒருவழிப்பாதையாய்
வானூர்தி செல்லும் பாதை
திக்கற்ற காடு? (361)
தானாய்ச் செய்யாது
தூண்டுதலே அதன் முதலீடு-
காற்றில் அசையும் இலை. (362)
தனக்குப் பிறர் நாடி
தரணிக்கே உதவி செய்வர்-
சவரத் தொழிலாளி. (363)
எங்கும் பரந்த புல்
தினந்தினம் தொடர்ந்து நடந்துவந்தேன்
ஒற்றையடிப் பாதை. (364)
தலைக்குமேலே வானம்
நிமிர்ந்து பார்த்து ஏமாந்தேன்-
அட... கீழே நீரிலும். (365)
சேற்றினுள்ளே எருமை
சுகமாய் வெப்பம் தணிக்கின்றது-
குழம்பியது குட்டை. (366)
சூரியச் சந்திரனின்
அற்புத கோலி விளையாட்டு
அட ... பகலும் இரவும். (367)
சூறாவளிப் பயணம்
வரலாறு படைக்கப்பட்டது-
ஓ... குடும்பத்தலைவி. (368)
சிரித்துப் போனாளே
வாழ்வதற்கா வழக்கிற்கா; ஓ...
வானில், இடி-மின்னல். (369)
சூரியகாந்திப் பூ
பொழுதிற்கொப்ப திசைமாறும்
மனிதப் பச்சோந்தி. (370)
சாணைக்கல் சிரிக்கும்
துருபிடித்த கத்தியைப் பார்த்து-
பட்டை தீட்டிய பின்? (371)
கோழியா? முட்டையா?
சாப்பிடுவது... மனப்போராட்டம்?
உலகத்துள் பரம்பொருள். (372)
முகத்தில் அரிதாரம்
மேடையில் இருக்கும் வரைதான்
வான் நட்சத்திரங்கள். (373)
கொஞ்ச நேரந்தான்
மூக்கைத் துளைத்த துர்நாற்றம்-
இரயில் வண்டியில் 'நான்'. (374)
கூர்மை போகவில்லை
போருக்குப் போகாத வாள்-
பாழடைந்த கிணற்றுநீர். (375)
உள்ளொன்று வைத்து
புறமொன்று காட்டும் உறவு
பக்குவப்படுத்திய 'தேன்'. (376)
குறுநில மன்னர்கள்
பேரரசுக்குட்பட்டவர்கள்-
புள்ளின் நுனியில் பனி. (377)
குடிக்கத் தயாரான
பாலில்... வந்துவிழுந்ததே ஈ-
திருமணத்தில் ஜாதகம். (378)
விளக்கொளியில் ஈசல்
மழை சென்றுவிட்டதாய் ஐதீகம்
நேற்றுதித்த காளான். (379)
காலையில் நிழல்தரும் மரம்
மாலையில் வெய்யில் தருகின்றதே-
திசைமாறும் 'சூரியன்?' (380)
காய்த்து வளர்ந்தது செடி
முதிர்வில் - காற்றின் பிள்ளையாய்?
அரசியல் தலைவர்கள். (381)
மிதிக்கும் கால்களுக்கு
மதிப்புமிகத்தரும் மிதியடிகள்
வாயிற்படிக் 'காவலன்'. (382)
கள்ளச் சாராயம்
காசுக்குத்தான் கிடைக்கிறது -
மாடியாகும் குடிசை. (383)
கருவில் வளர்கின்ற
குழந்தைக்குச் சோர்வேயில்லை-
இளமைச் சித்தார்த்தன். (384)
கற்றாழையில் முள்
குத்தவும் குளிரவும் செய்வதுண்டு
இல்லத்தில் 'மனைவி'. (385)
கண்ணாடி வளையல்
அலங்கோலமாய் உடைத்துவிட்டனரே-
சிரிக்கும் 'வெண்ணாடை?' (386)
ஒன்றில் உருவாகி
மற்றொன்றில் கலவாதது; அட...
நிறமாலைக் கதிர்கள். (387)
வானில் 'உதயசூரியன்'
பார்த்ததும் கூசிப் பின் தெரிவான்
கற்றோர்தம் 'நட்பு'. (388)
ஓடையின் குறுக்கே
கல்லொன்று இருந்தது; அடடே...
பிரிந்து சென்றதே நீர். (389)
எழுதுகோலை மூடினேன்
காற்றில் உலர்ந்துவிடுமென்றெண்ணி-
எழுதுகோலில் துவாரம். (390)
கரைகின்ற காகம்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்
பல்சமய விருந்து. (391)
எரியாத விளக்கா
எண்ணையும் திரியும் மாற்று-
அட... தத்துப்பிள்ளை. (392)
எச்சில் பூக்களையும்
பூசைக்குப் பறித்துவிட்டார்கள்-
அட... விதவைத் திருமணம். (393)
பல்லாயிரம் பூக்கள்
இருந்தாலும், பூபாளக் 'குறிஞ்சி'
வீட்டோடு 'மருமகன்'. (394)
ஊர்வலத்தில் நடந்து
ஊர்வலத்தை நடத்திவைக்கும்-
புயலின் நடுவே 'மரம்'. (395)
உல்லாசப் பறவை
வரும் புயலால் திசைமாறும்-
நெருப்பில் விழுந்த புழு. (396)
ஏழ்மையின் சின்னம்
எதுவென கண்டுபிடித்துவிட்டேன்
ஓ... அடுப்புப்பூனை. (397)
உதிர்ந்தால் மட்டுமல்ல
செடியிலேயே வாடும் மலர்கள்-
பருவ மங்கையர்? (398)
உடலின் நாளங்களில்
குருதியின் வேலைநிறுத்தம்...ஆ
உதட்டில் அட்சரேகை. (399)
காலில் புதுச்செருப்பு
கடித்தாலும் விடமாட்டார்கள்
நல்ல 'இல்வாழ்க்கை'. (400)
இருளை விரட்டிடவே
விளக்கைப் போட்டேன்; விலகியது-
இக்கட்டில் 'ஆந்தை'. (401)
இரவில் மட்டுந்தான்
நடைபாதை வாசி - பகலில்
கட்டிடத் தொழிலாளி. (402)
ஏழையின் நாக்கே
இந்தியாவின் உன்னத 'சகாரா'
குளிர்ப்பெட்டி வாசிகள். (403)
ஆழமாய் நேராய்த்தான்
புதைக்கப்பட்டது பூமிக்குள்-
சாய்ந்திருக்கும் 'தென்னை'. (404)
ஆடம்பர வீட்டின்
நுழைவாசலில் வறுமைக்கோடுகள்-
நாட்டில் - உழைப்புறிஞ்சிகள்.(405)
வானத்தில் மட்டுமா
நிலத்திலும் வாழ்கின்றன - கழுகுகள்
அரசியல் தலைவர்கள். (406)
அழியும் போது தான்
சுடர்விட்டெரியும் மெழுகுவர்த்தி-
முதிர்ந்து உதிரும் இலை. (407)
அலாங்காரமாய்க் கூவம்
தேர்தல் வந்துவிட்டது; அடடே...
தொண்டனாகத் தலைவன். (408)
பூவோடு சேர்ந்த
நாரும் மணக்கத்தான் செய்யும்
ஓ... கற்றுச் சொல்லிகள். (409)
அணை கட்டாதவரை
அனைவருக்கும் உரியது ஆறு-
கழுத்தில் மங்கல நாண்? (410)
அங்காடியின் அழகு
எல்லோரையும் கவர்ந்துவிட்டது-
அட... காலில் செருப்பு. (411)
அந்தரத்தில் மனிதன்
மேலும் கீழும் ஆபத்து-
வாழ்க்கையில் மகிழ்ச்சி. (412)
அலைமோத கட்டினேன்
புயலில் தரைமட்டமானது - ஓ...
கரையில் 'மணல்வீடு'. (413)
செம்புலப்பெயல்நீர்போல்
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தன
ஓ... சவ்வூடுபரவல். (414)
அழுக்காய்க் கரைகின்றது
அழுக்கை நீக்குகின்ற சோப்பு-
குடும்பத்தில் 'பெண்கள்'. (415)
ஆத்திரக்காரன் தான்
பொறுமைக்கு இலக்கணம் வகுத்தான்-
வற்றிய கிணற்றில் 'நீர்'. (416)
முகவரியைத் தேடும்
முகவுரை பெற்ற காதலி; ஓ...
பாற்கடலில் 'அமிர்தம்'. (417)
இரயிலின் தலைவிளக்கு
வளையாத நீள் பாதையில் ஒளி-
முயற்சியின் வெளிப்பாடு. (418)
இரவை விரட்டிடும்
வீதியோர மின்விளக்குகள்; அட...
தடங்களுக்கு வருத்தம். (419)
பாதை ஓரத்தில்
விரசங்கள் விலைபேசப்படும்
பாவம், வறுமைத்தாய். (420)
இல்லாத அழுக்கைச்
சேர்த்தே கொண்டுவரும் குருதி-
நுனி முள்ளில் அழுக்கு. (421)
உணர்வின் நம்பிக்கை
பிம்பங்கள் உண்மையாகும்-
திரையரங்கத்துள் 'நான்'. (422)
மாட்டுச் சந்தையில்
ஆளாளுக்கொரு விலைப்பேச்சு
மணக்காலத்தில் 'பெண்'. (423)
உயிர்தரும் வேருக்கு
உதிர்ந்து உரமாகும் இலைகள்-
நன்றி உள்ளது 'நாய்'. (424)
உள்ளே புழுங்குவதைப்
புகையாக, வெளியே காட்டும்-
அட... செங்கற் சூளை. (425)
எமன் வீட்டு வாசலில்
மங்கலவிழா நடைபெறுகின்றதே-
சுடுகாட்டில் 'திருமணம்'. (426)
எங்கும் வெற்றுத்தாள்
செய்திகளைச் சுமந்த பிறகு-
முகம் தேடும் கடிதம். (427)
எதுவாயினும் பிரித்துப்
பார்த்து வாங்குகின்ற போது
ஓ... பெண்களை மட்டும்? (428)
குண்டு கலாச்சாரம்
குழிதோண்டி புதைக்கப்பட்டது
குழியில் 'கம்ப்யூட்டர்'. (429)
எல்லாம் முடிந்துவிட்டது
நிம்மதியாய் இருக்க எண்ணினேன்-
நெஞ்சில் ஒரு நெருஞ்சி. (430)
என்ன ஆச்சர்யம்
அரசியல் கட்சிகள் என்னவானது?
அடுப்பிற்குள் 'பூனை'. (431)
புத்தகத்தில் ஈக்கள்
கூட்டங்கூட்டமாய் மொய்க்கின்றன
நிர்வாணச் சித்திரம். (432)
ஒதுக்கி வைத்துவிட்டுப்
பின் தேடினேன், கிடைக்கவேயில்லை-
சிப்பிக்குள் முத்து. (433)
கடலில் மட்டுமா அலை?
தண்ணீருள்ள இடமெல்லாம்; அட...
குப்பிக்கேற்ற மூடி. (434)
அங்காடி வாயில்
விற்பனைக்கு விளம்பரச் சிலைகள்
மணச்சந்தையில் 'பெண்'. (435)
கதவைத்திற - மின்னல்
வெளியில் வந்தால் - இடி; அடடே...
வாழ்க்கை, இடி-மின்னல். (436)
கவலை கொள்ளவில்லை
அசோகவனத்தில் சீதை; அட...
ஏமாறும் 'இராவணன்'. (437)
விளக்கேற்ற வந்தவள்
விளக்காக எரிகின்றாளே
அழுகின்றது 'எரிவாயு'. (438)
கனிகளின் நல்லாக்கம்
மரத்தின் நடுவில் கரும்பாதை-
உதிரும்... பொய்ச்சோறு. (439)
காலில் பட்டது நீர்
காய்வதற்குள் எத்தனை மண்துகள்-
வாழ்க்கை, காற்றின் அலை. (440)
ஏழு பிள்ளைகள்
ஒரே தாயின் வயிற்றில் பிறந்தனர்
நிறமாலைக் கதிர்கள். (441)
காற்றில்தான் தீயும்
பிரகாசமாகச் சுடர்கொடுக்கும்-
உடலும் உயிரோடு. (442)
குட்டையில் எருமை
படுத்துக்கொண்டு இருக்கின்றது-
பணத்துக்குள்ளே 'மனம்'. (443)
ஆத்மாவின் கண்ணீர்
உடலுக்கு நிம்மதியைத் தரும்
கோடைக்கால 'மழை'. (444)
கூட்டமாய்த் தேனீக்கள்
பறந்து வந்தன; ஏமாற்றம்-
சாடியில், காகிதப் பூ. (445)
கேள்விக் குறியாய் நான்
கண்கள் குருடாய்ப் போனதாலே-
காட்டாற்று வெள்ளம்? (446)
கட்சித் தலைவர்கள்
தொகுதியில் ஈயாய் மொய்க்கின்றனர்.
அடடே... இடைத்தேர்தல். (447)
கொத்துகொத்தாய்ப் பூக்கள்
கொடியில் அழகாய் மிளிர்கின்றதே-
ஓ... கூட்டுக்குடும்பம்? (448)
சமுதாய வானில்
மின்னலா கதவைத் தட்டுகிறது?
இன்னலில் வருவதே இடி. (449)
பாராளுமன்றத்தில்
அண்ணாவின் சுருக்கமான உரை
அன்னம் அருந்தும் 'பால்'. (450)
சிகரத்தின் உச்சியில்
தோரண அலங்காரங்கள்-
அடிவாரத்தில் 'நான்'. (451)
சீரான எழுதுகோல்
இறுதியில் பிரகாசமாய் எழுதும்-
சாகும் முன் 'ஆன்மா'. (452)
ஒவ்வொரு மேடையிலும்
சமத்துவங்களையே பேசுகின்றனர்
கொல்லைப்புறம் 'வாசல்'. (453)
செடியில் பிறந்தது மலர்
வதங்கினாலோ தானாய் உதிரும்-
ஓ... அழுகிய பலாக்கனி? (454)
சேற்றுத் தாமரைகள்
அர்ச்சனைக்குத் தயாராகின்றன-
குப்பையில் மாணிக்கம். (455)
வந்த கடிதத்தில்
அனுப்புநர் முகவரி எங்குமில்லை
உலகத்தில் 'பரம்பொருள்'. (456)
தழுவும் பனங்குருத்து
தலைவிரித்தாடும் பனையோலை
காலச் சூழலில் 'நான்'. (457)
தனித்தனி முகவரிகள்
பேதமில்லாத கூட்டுவாழ்க்கை-
மனிதனின் உடற்கூறுகள்? (458)
வெய்யிலில் சுடர்விளக்கு
வெளிச்சத்தைத் தந்தென்ன பயன்?
நீதிமன்ற வழக்குகள். (459)
திக்கெல்லாம் கண்கள்
கணைகள் ஒருதலையாய் மாறும்-
செய்தி வாசிப்பவள். (460)
தீர்ந்த கடனுக்கு
சுடுகாட்டில் வட்டிதரும் மகன்-
கொள்ளிக் கட்டைகள். (461)
அத்திப்பூ மாலை
ஏழையின் கழுத்தில் விழுந்தது.
தேர்தல் வாக்குறுதி? (462)
தூங்காமல் விழித்து
நேராய் வளர்க்கப்பாடுபட்டேன்-
இயல்பாய் வளர்ந்தது 'பனை'.(463)
தேயும் கரித்துண்டு
அழிவில்லையென்று சிரிக்கின்றது-
சுவரில் விளம்பரங்கள். (464)
சட்டசபைக் கலகம்
அடிஉதைக்குப்பின் வெளிநடப்பு
ஓ... பாகப் பிரிவினை. (465)
நகத்தைக் கடித்த பல்
விரலையும் எச்சில் செய்தது-
நகப்பொந்தில் அழுக்கு? (466)
நாளைக்கு என்று
நாள்பட வைத்திருக்க முடியுமா?
நாள்பட்ட கிணற்றுநீர். (467)
ஒவ்வொரு பூவிலுந்தான்
தேனை உண்ணுகிறது வண்டு
வீட்டிற்குள் 'பரத்தை'? (468)
நிலத்தில் பதுங்கும் புலி
பாய்வதற்குத் தயாராகின்றது-
மின்சாரக் கம்பிகள்? (469)
நிழலைத் தந்த இலை
உதிர்ந்து பட்டமரமாகும்; அட...
இலைக்கு நிழல்தரும் மரம். (470)
ஏழ்மையின் உதட்டில்
வறுமைக் கோடுகளே அதிகம்
ஏழையின் சிரிப்பு? (471)
நின்றதோ மின்சாரம்
எல்லாமும் நின்றது; ஆனால்...
அவசர மின்விளக்கு. (472)
நீர் நிரப்பும் தொட்டி
அடியில் சிற்றெறும்பின் முட்டை-
சாக்கடைச் சமுதாயம். (473)
இராட்டையில் பருத்தி
நூலானால்தான் தறியில் துணி
தாய்-சேய் நலவிடுதி. (474)
நெஞ்சின் குமுறல்கள்
நெருப்பாய்க் கண்ணீர் வெளிப்பாடு-
பூகம்பத்துள் 'நான்'. (475)
பக்திப் பிரதேசம்
எங்கும் மண்டியிட்ட வணக்கம்-
வறுமை சிறைச்சாலை. (476)
கண்ணகியின் சிலம்பு
நெடுஞ்செழியனிடம் பேசியது
நெருப்புக்குள் 'மதுரை'. (477)
பந்தலில் மின்விளக்குகள்
மிகுந்தும் குறைந்தும் ஒளிகாட்டும்-
வான் நட்சத்திரங்கள். (478)
பலவித எழுத்துக்கள்
புள்ளியே அனைத்தெழுத்திற்கும் முதல்-
ஆத்மாவுள் 'பரம்பொருள்'. (479)
குண்டூசியின் எல்லாப்
பக்கங்களும் முகத்தைக்காட்டும்-
அடடே... 'ஐக்கூ'க்கள். (480)
காட்டுப் பாதையில்
காற்றடித்தும் விலகாத முள்
வேகமாய்த் தேர்ச்சக்கரம். (481)
பார்வை குன்றியது
உதவிக்கு வந்தது கண்ணாடி-
தாய்க்குப் பின் தாரம். (482)
புத்தகத்தைத் திருத்தினேன்
எப்படியோ சரியாகிவிட்டது-
அடித்தல் அழியாது. (483)
வாசமில்லை எனினும்
வனத்துப் பூக்களிடம் வண்டுகள்
எல்லாப் பூவிலும் 'தேன்'. (484)
புள்ளி வட்டமாகலாம்
ஆரமே வட்டத்தின் மூலம்-
சமுதாயத்தில் 'பெண்'. (485)
பூமிக்குள் விதையை
ஆழமாகப் பதியச்செய்தேன்-
சிரிக்கும் 'தரிசு நிலம்'. (486)
பிரம்மாவா எழுதினான்
வாழ்வின் ஆயுட்காலத்தை
உணர்ச்சியின் சீரமைப்பு. (487)
பேய்க்காற்றில் புழுதி
எத்தனைபேர் கைகள் கண்ணில்-
பாவம், தேன்கூடு. (488)
மதுவிலக்குச் சட்டம்
முறையாக அமுல்படுத்தப்பட்டது-
கள்ளச் சாராயம். (489)
சுவீகார பந்தம்
மக்களுக்கு மட்டுந்தானா?
புலிக்கூண்டில் ஆடு. (490)
மனப்போராட்டம்
உண்பது கோழியா? முட்டையா?
உருண்டையாய் உலகம். (491)
மின்னலாய் மினுக்கிறது
உறையில் உறங்கும் பாசறைவாள்-
சிரிக்கும் சாணைக்கல். (492)
தினமும் ஒரு அழைப்பிதழ்
அனுப்பும் கல்லூரி மாணவன்
புத்தகத்தில் காதல்? (493)
முல்லை வாசமில்லை
என்றாலும் ஒழுக்கத்தின் தலை-
சிரிக்கும்... குறிஞ்சிப் பூ. (494)
மூடியகண் திறந்தது
எங்கும் வெண்மைப் பிரவாகம்-
தண்ணீருக்குள் 'நான்'. (495)
வரிசையாய் எறும்பு
எல்லோரும் பின்பற்றவேண்டும்
சலுகையில் 'பதவி'? (496)
யார் சொல்லிக்கொடுத்தார்
சேவலுக்கு விடியப்போவதை-
பஞ்சாங்கப் பேய்கள். (497)
வரிசையாய்ச் செல்லும்
மனிதர்களைக் கண்டு வியந்தேன்-
ஒற்றையடிப் பாதை. (498)
எளிதான வேலை
வெள்ளாடையை அழுக்காக்கல்
அட... விதவை மறுமணம்? (499)
வாழ்கின்றவன் மனிதன்
'உம்' உலகம் வாழ்கிறதாமே-
மனசுக்குள் மனிதன். (500)
விதையில்லையாயினும்
கிளையினாலே வெற்றிலைக்கொடிகள்-
நல்ல சமுதாயம். (501)
தொழிற்சாலையில் கை
வேலை செய்தால்தான் ஊதியம்
கால் காக்கும் 'செருப்பு'. (502)
விளைச்சலைப் பெருக்குவதற்கு
விரல் இடுக்கில் புகைகிறது புகை-
புகைகின்றது 'நெஞ்சு'. (503)
வேகமாய்ச் செல்கிறதே
சிதறல்கள் இடமாற்றம்; அட...
சாலையில் பேருந்து. (504)
அமாவாசை நாளில்
வானமும் பூமியும் நண்பர்கள்-
எரியாத விளக்குகள்? (505)
அழகாய் நாற்காலி
உட்காருவதற்குப் போட்டி-
நசுங்கியது 'எறும்பு'. (506)
என் நாட்குறிப்பேடு
நினைவுகளை மலரச்செய்தன
மக்கிப்போன 'தாள்'. (507)
அறம்பொருள் இன்பமெல்லாம்
வீடு பேற்றில் கண்டுவிட்டேன்-
ஒப்பாரி 'மனைவி'. (508)
ஆத்மாவை எழுப்பு
நிச்சயம் தவறுகள் விடுதலைபெறும்-
உனக்குள் ஒருவன். (509)
மேய்வதாய்ச் சொன்னார்கள்
ஓடிச்சென்று பார்க்கின்றேன்
மணிலா வயலிலாடு. (510)
இரயிலின் நெம்புகோல்
வெளியே தெரிந்தாலும்-சக்கரம்
தண்டவாளத்தில் தான். (511)
இராட்டையில் பருத்தி
நெசவாளர் கொடுத்தார் ஆடை-
கடைசியில், தாய்க்கு மகன்? (512)
எதிர் எதிராய் இருந்தும்
துன்பம் வர... சேர்ந்தே சாகும்
கிளையில் பச்சிலைகள். (513)
இனிப்பே காட்டும் தேன்
உள்ளுக்குள் கசப்பையும் தரும்-
போலி மனிதர்கள். (514)
உணவுக்குப் பிறகுநீர்
செரிமாணம் நன்றாய் நடக்கும்-
நாற்று நட்ட வயல். (515)
அடங்காத இதயம்
இமைகள் மூடியும் அடங்காது
சிம்மாசனக் 'கனவு'. (516)
உயிர்ப்பிணங்களைப் புதைக்கும்
மனிதன் வயிறே 'சுடுகாடு'-
கொல்லாமைக் கொள்கை? (517)
உன்னதமாய்ச் சித்திரம்
உன்னிப்பாய்க் கவனித்தேன்; அட...
ஆழப் பதிந்தது 'மனம்'. (`518)
சிலரின் ஆவேசம்
புதிய வீடும் எரிகின்றது
இரவில் 'தேன்கூடு'. (519)
எங்கெங்கு வெளிச்சம்
இருள்மாறினாலும் அரசாட்சி-
மரப்பொந்தில் 'பாம்பு'. (520)
எத்தனை கட்டைகள்
எவ்வளவு சல்லிக்கற்கள்-
இரயில் தண்டவாளம். (521)
எழுதுகோலின் மூடியில்
எழுத்து... பொறிக்கப்பட்டிருக்கும்
வீட்டில் பெயர்ப்பலகை. (522)
எல்லா விதைகளுமே
பக்குவமாக முளைக்கின்றது-
எஜமானனின் கட்டளை. (523)
என்ன ஆச்சர்யம்
காலில் மட்டுமல்ல செருப்பு-
முடவன் விரல் இடுக்கில். (524)
ஒற்றுமையாய்ப் பறவைகள்
எப்படி? வானில் பறக்கின்றன?
ஊடகத்தில் 'காற்று'. (525)
ஒருதுளித் தேன் சிதற
எங்கு இருந்து வந்தன இவை?
வட்டமிடும் 'எறும்பு'. (526)
கட்சித் தோரணங்கள்
முரசு கொட்டும் கொள்கைகள்-
என்றும் 'பாதசாரி'? (527)
ஆடு புகாதவாறு
சுற்றிலும் வேலி எழுப்பினார்கள்
வேலி ஓரம் 'தழை'. (528)
கதை வசனம் இயக்கம்
பாத்திரம் எல்லாமே நாம்தான்-
உலகத்துள் பரம்பொருள்? (529)
கவிஞன் கண்களுக்கு
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்-
வாழ்க, மகாத்மாக்கள். (530)
தெறிக்கும் மழைத்துளிகள்
முள்ளில் தற்கொலை செய்துகொள்ளும்
பெற்றோர் உபதேசம். (531)
காட்சிகளைக் கண்டதும்
எழுத்தில் கொடுக்கின்றவன் கவிஞன்-
பாவம், ஆய்வாளன். (532)
காலில் புதுச்செருப்பு
இன்னுமில்லை பாதச்சுவடு-
வெண்ணிறச் சேலைகள். (533)
வரப்போரத் தண்ணீர்
வீணாவதால் தென்னை வளர்த்தேன்.
என்... சவலைப்பிள்ளை. (534)
காற்றின் செய்திகளை
உடனுக்குடன் வாசிக்கும்; அட...
முற்றத்தில் தென்னை. (535)
குத்த, வரும் இரத்தம்
அழுக்கையும் சேர்த்தா கொண்டு வரும்
முள் நுனியில் அழுக்கு. (536)
வேகமாக மிதித்தேன்
மிதிவண்டி விரைவாய்ச் சென்றது
நெஞ்சில், முயல்-ஆமை. (537)
கூட்டு வாழ்க்கைதான்
தேசியத்தின் ஒருமைப்பாடு-
தனித்தனி முகவரிகள். (538)
கைக்குட்டை அழுக்கு
நமக்கே வெறுபபைத் தோற்றுவிக்கும்-
பாவம், சுமைதாங்கி. (539)
வாழ்ந்தவரைப் பார்த்து
வாழ்பவர்கள் அழுகின்றார்கள்
சுடுகாட்டில் 'தோட்டி'. (540)
கொழுந்து விட்டது மரம்
முதிர்வில் காற்றின் பிள்ளையாய்-
அரசியல் தலைவர்கள். (541)
சமூக அமுதசுரபி
இன்னும் வற்றவில்லை; சுரக்கும்-
நாட்டில் மக்கள்தொகை. (542)
ஓரிடத்தில் அழுத்தினால்
சுடர்விடுகின்ற பல விளக்குகள்-
உன்னத 'ஐக்கூ'க்கள். (543)
இருகிய கற்றாழை
எண்ணெய்விட்டு இளகாக்கினேன்
வழிகின்றது 'கசடு'. (544)
சிதறாத மனதில்
தங்கியிருந்தது கோயில்புறா-
மனம், செம்புலப்பெயல்நீர். (545)
சீவலில் வலியுண்டாம்
எழுதும்போது இன்பம் தரும்-
பிள்ளைப் பேற்றில் 'தாய்'. (546)
மங்கலாய்த் தெரிவதாலே
கண்ணைக் கசக்கிப் பார்க்கின்றேன்
உச்ச நீதிமன்றம்! (547)
செத்த பிணத்திற்குப்
பிரச்சாரம் செய்கின்றோம்; அட...
ஒப்பாரிப் பாட்டு. (548)
தங்கையின் திருமணம்
மகனை விலைக்கு விற்றுவிட்டேன்-
கரம்பு நிலத்தில் நெல். (549)
உலர்ந்த நூலின் மேல்
தண்ணீரைத் தெளித்து வைத்தேன்
தனியார் காப்பீடு. (550)
தழுவும் மனைமட்டை
தலையில் தன்குணம் காட்டுகின்றது-
தலைவிரியாய் மட்டை. (551)
தன்தாள் வணங்காத்தலை
நேரம் வரும்போது குனியும்-
கழுத்தளவே வாயில். (552)
மொட்டைக் காத்தேன்
பூத்ததும் தேன் எடுத்தது வண்டு
பறந்தது... கூண்டுக்கிளி. (553)
திசை நான்கும் வேதம்
பரம்பொருளே மூல கர்த்தா-
திசைகாட்டும் கருவி. (554)
தும்பிக்குச் சிறகுகள்
பறப்பதற்கு மட்டும் அல்ல-
உலகவொற்றுமைக் கழகம். (555)
காந்தர்வத் திருமணம்
இன்றளவும் நடைபெறுகின்றது
அனாதை இல்லங்கள். (556)
தூசு பறக்கவில்லை
ஓ... மழையால் நனைந்த பாதை-
பணிக்குச் செல்லும் பெண். (557)
தேய்த்து வரும் காலணி
யாரென்று புரிந்துவிட்டது-
புரண்டு நிற்கும் மனம். (558)
குடிகாரன் பேச்சு
பொழுது விடிந்தால் போச்சு- ஓ...
மாங்கொண்டை 'வண்டு'. (559)
நகல் எடுக்க நினைத்தேன்
நிழல் வந்து மறைத்துக்கொண்டது-
நிஜத்தைக் காணவில்லை. (560)
நாற்றிசையும் வெள்ளம்
நடுவில் ஒரு சிறிய துவாரம்-
பிண்டத்துள் அண்டம். (561)
இனிக்கும் மாங்கனியை
இறுதிவரைச் சுவைத்துண்டேன்...ஓ
வண்டுக்கு விடுதலை. (562)
நிலத்தைச் சுரண்டும் கை
கரம்பு நிலத்தையும் விடவில்லை-
விரல் நகப்பொந்தில் மண். (563)
நிழல் தேடிய கால்கள்
உறங்குவதற்கு இடங்கேட்டது-
ஒண்டவந்த பிடாரி. (564)
பகலில் காய்ந்த தரை
இரவில் வேர்க்கின்றதே; எப்படி?
நெஞ்சக் குமுறல்கள். (565)
நீக்கியும் நீங்காமல்
பேருந்தில் சமசரம் பேசுவோம்-
பெண்களுக்குத் தனியிடம்? (566)
நீர்ப்படராத தாமரை
நிலம்படத் தானாய் ஒட்டும் மண்-
மனித ஒட்டுண்ணி. (567)
கடலோடு ஆறு
இரண்டரக் கலந்துவிட்டது; பின்னர்-
மழையாகக் 'கடல்நீர்'. (568)
நெய்விளக்கில் அழியும்
விட்டில் பூச்சிகள் மகிழ்கின்றன-
மூடிய சொர்க்கவாசல்? (569)
பசுமையாய் வளர
பாத்தி கட்டி உரமிட்டேன்-
வேருக்கு 'வெந்நீர்'? (570)
எதுவுமில்லை என்பதும்
என்னதான் இல்லை என்பதுவமே-
'ஐக்கூ'க் கவிதைகள். (571)
உடைந்த மோதிரக்கல்
பலவாய்ப் பொலிவுற்று நின்றன
அட... கூட்டுக்குடும்பம்? (572)
பம்பரத்தின் சுழற்சியில்
எத்தனை எத்தனை வட்டங்கள்-
தேர்தல் அறிக்கைகள். (573)
பலவித வண்ணங்கள்
கூட்டு முயற்சியில் ஒன்றுபட்டன-
சிவக்கும் தாம்பூலம். (574)
பேருந்துப் பயணம்
சிறுநீரை அடக்கிக்கொண்டேன்
இழவுவீட்டில் 'அழுகை'. (575)
பாலம் அமைக்கின்றதே
விண்ணை முட்டும் கோபுரங்கள்-
மண்ணில் ஊன்றும் கால். (576)
புத்தகப் பேழையில்
சருகான புத்தகங்கள்; அட...
பழைய புத்தகக்கடை. (577)
துப்பிய எச்சில் என்
காலையே அசிங்கமாக்கியது
தன்வினை தன்னைச்சுடும். (578)
புள்ளின் வைரத்தலை
பனித்துளி மட்டுமா தருகிறது?
வாய்க்காலில் தண்ணீர். (579)
பூமியில் விண்மீன்கள்
நேரத்துக்காயிரம் வண்ணம்-
கன்னிகளின் கண்கள். (580)
எங்கிருந்தோ செடியை
வீட்டிற்குள் கொண்டுவந்துவைத்தேன்
வற்றியது 'கிணறு'. (581)
பேருந்து நிலையம்
தேசியத்தின் ஒருமைப்பாடு-
நிலைக்கு-முன்-செருப்பு. (582)
மரமாய் நடவில்லை
பொய்களின் நடுவில் உண்மைகள்-
மரத்தின் கிளையில் பனி. (583)
புத்தக அட்டைப்படம்
புத்தகப் பொருளை உணர்த்துகின்றது
மணப்பெண் அலங்காரம். (584)
மனுநீதிச் சோழன்
குற்றத்தை மட்டுமா கண்டான்-
நீதிக்குத் தண்டனை. (585)
முகவரி கொடுப்பதற்குள்
பாவம், முகவுரை கிடைத்துவிட்டது
ஓ... கள்ளக்குழந்தை. (586)
காட்டுக்குள் விலங்குகள்
வேடிக்கையாய்ப் பார்க்கின்றன
இரயில்களின் முத்தம். (587)
ஆன்மாவை எழுப்பு
எதையெல்லாம் பேசும்பார்-
உங்களிடமும் 'ஐக்கூ'. (588)
முழுதாய் அனுபவித்து
தெருவினில் வீசி விடுகின்றோம்-
அடிப்பாக 'சிகரெட்?' (589)
மூளைச் சலவையில்
முக்கியமான உரை எழுதினேன்-
மூடிய தபால்பெட்டி? (590)
கோழி மிதிப்பதாலா
செத்துவிடுகின்றது குஞ்சு. அட
கர்ப்பத்தில் குழந்தை? (591)
யார் தொடங்கி வைத்தது
முடிவில்லாத ஊர்வலம்; அட...
தேன் சிந்திய 'உலகம்'. (592)
வரிசையாய்க் கம்பம்
உச்சியில் எரியும் மின்விளக்கு-
தரையோ மேடுபள்ளம். (593)
விறகின் தீக்குளிப்பை
அடுப்பு ஏற்றாலும்.. ஏற்கா(து)
நிணப்போர்வை 'மனிதன்'. (594)
வாளின் செயற்பாட்டால்
இரண்டாக்கப்படுகிறதே மரம்-
உதிரும் மரத்தூள்கள். (595)
விரட்டியது தேனீ
பறக்கும்போது உதிர்ந்தது மலர்-
முடவன் 'கைக்கொம்பு'. (596)
அதிகாரி வந்து
வீட்டைச் சோதனை செய்கின்றார்
உடலில் வியர்வைத்துளி. (597)
வீசிய சிகரெட்டின்
நெருப்பால் எரிந்தது மாவீடு-
ஓ... கண்ணகி வழக்கு. (598)
வேடிக்கை உலகம்
வேதனை வாமன அவதாரம்-
சிற்றெறும்புச் சாதனை. (599)
உயரப் போவதற்கு
உடல் முழுக்க வடுக்களைத் தாங்கும்
ஓ... தென்னங்கீற்று. (600)
வேர்க்கும் அந்திவானம்
முத்துமுத்தாய் நட்சத்திரங்கள்-
புள்ளின் நுனியில் பனி. (601)
வீடுதொறும் வாசல்
வாசல்தொறும் கதவும் பூட்டும்-
ஓ... விடுதலைப் பொன்விழா?(602)
கனகாம்பர விதைகள்
நீர்ப்பட்டதும் வெடித்துச் சிதறும்
குடிசைக்குள் 'புரட்சி'. (603)
விரல் பட்டது மட்டுமா?
மக்கியுரமாக்கப்படுகிறது?
மாணிக்க மனிதர். (604)
வானச் சமுதாயமும்
விட்டுவிடவில்லை, மதவெறி; அட...
இன்னலில் வருவதே இடி. (605)
சுவைக்கின்றதே சர்க்கரை
எவ்வளவு கரும்பு அழிந்தன
அடடே... மறுபிறவி. (606)
வழியாய் மண்பாதை
சுவடாய், நடந்தவரின் பாதங்கள்-
பூக்காது, அத்தி. (607)
யார் போட்டது பூட்டு
சாவி இல்லாமலே திறந்ததே-
பருவப் பெண்ணின் 'மனம்'. (608)
திரைப்பட விளம்பரங்கள்
மதில் சுவரை அலங்கரித்திருந்தன
நடிகையின் 'கணவன்'? (609)
மெதுவாகத் தொட்டேன்
அப்படியும் என்ன சத்தம்-
சலசலக்கும் கீற்று. (610)
முள் இரண்டும் இணைய
ஓடினால் நலமிகு கடிகாரம்-
இரயில் தண்டவாளம்? (611)
மேடேறும் போது
வழுக்கின் உதவிக்கு வரும் கை
ஆலமர விழுதுகள். (612)
முகவரி மாற்றத்தால்
திரும்பி வந்துவிட்டது கடிதம்-
கால்கடுக்கும் செருப்பு. (613)
மாடியின் விளக்கெல்லாம்
அணைந்தால்தான் குடிசைக்கு ஒளி-
யானையுண் விளாங்கனி. (614)
ஆற்றின் நடுவே கல்
பிரிந்து உடனே இணைந்தது நீர்
மணமுறிவு வழக்கு? (615)
மரம் வளர்ந்தாலும்
எப்பவும் மண்ணை மறப்பதில்லை-
ஆறறிவு மனிதர்? (616)
பைசாவில் தேசியம்
பகலும் இரவும் இருபக்கம்-
அண்டத்தில் பூமி. (617)
முள்ளில் படர்ந்தது கொடி
எடுக்காதே. அப்படியே விடு
சீர்த்திருத்தப் பள்ளி? (618)
பூவிழி வாசலிலே
பாவம், சோதனைத் துப்பாக்கி-
ஆம்... தீவிரவாதி. (619)
புறந்தூய்மையானவன்
சேற்றில் குளித்தாலும் ஒதுக்கான்-
எருமை தருமே 'பால்'. (620)
பிணமும் கொலை செய்யும்
இது எப்படி சாத்தியமாகும்?
மீனவன், கைத்தூண்டில். (621)
புத்தகமானாலே
ஏற்றத்தாழ்வை விலக்குந் தாள்கள்-
சமுதாயக் கட்சிகள்? (622)
பிரம்மா எழுதவில்லை
வாழ்வின் கால கட்டத்தை-
உணர்ச்சியின் சீரமைப்பு. (623)
சட்டையில் ஊக்கு
விளிம்புகளை இணைக்கின்றது; அட!
ஆற்றில் தொங்குபாலம். (624)
பல் மறைக்கவா உதடு
தவறிய சொல்லால் நாக்குமுதடும்-
பாதை மாறினால் முள். (625)
பயணத்தில் பார்த்தவள்
தினந்தினமும் தொடர்கின்றாள்; ஓ...
நினைவின் அலைவோசை. (626)
ஆன்மா எப்பொழுதும்
யாவருக்கும் தூங்குவதில்லை
உடலின், அணிச்சைச்செயல். (627)
படித்துறையில் வண்ணான்
அலசி வெளியேற்றும் அழுக்கு-
மீனுக்கு உணவு. (628)
நெருப்பு அழுகின்றது
மடைதிறக்கும் கண்ணில் கண்ணீர்-
பிணத்தருகே 'மக்கள்'. (629)
உயர வீசிய கல்
எவ்வளவு தூரம் செல்லும்
ஓ... புவியீர்ப்பு விசை. (630)
நீர் உண்ணும் பாசி
நீரோடு மட்டும் வாழும்-
கணவனோடு மனைவி. (631)
நீரில் இறங்கிய நாய்
கரைக்கு வந்ததும் களிப்படைந்தது-
தீயில் விடப்படும் நெய். (632)
வயலோரம் வேலி
முதிர்ந்ததும் எட்டிப்பார்க்கும் கதிர்
பருவ மங்கையர். (633)
நிறம் மாற்றச் சொல்லி
சந்தைக்கு வந்தது வெண்மலர்-
சருகாய்ச் சமுதாயம். (634)
நிலமெங்கும் நிலவு
பகலும் இரவும் பகலிலேயே-
வானில், இரவல் நிலா. (635)
சிகரெட்டின் சாம்பல்
விரலால் தட்டியா உதிருகின்றது
கிளையில் முதிர்ந்த 'இலை'. (636)
நாற்று போல் மக்கள்
'உம்' எத்தனை எத்தனை மொழிகள்-
பூப்பதெல்லாம் பழமா? (637)
நடந்து போகின்றேன்
மேடும் பள்ளமும் தொடர்கின்றது-
நெஞ்சின் அலை ஓசை? (638)
முள் குத்தும் போது
எருக்கம் சிலதுளி பால்வடிக்கும்
பிணத்தருகே 'கண்ணீர்'. (639)
தேவையுள்ள வரை
அதிகமான கண்காணிப்பு-
ஓ... குலவிக் கூடு. (640)
தூய்மை இல்லாதது
எப்படியோ சகித்துக்கொள்கிறோம்-
எருமை தந்ததே 'பால்'. (641)
கால்கள் போனாலும்
தலையை மட்டும் காத்துக்கொள்
முச்சக்கர வண்டி. (642)
துயரப்பெண் கண்களில்
தூசு அகற்றப்படவில்லை-
விதவை, நன்செய் நிலம். (643)
திட்டுக்களாய் வானில்
மேகங்கள்... எட்டிப்பார்க்கும்-
புவியெல்லாம் சோலை. (644)
நன்றாய்த் துடைத்துத்தான்
புண்ணுக்கு மருந்திடவேண்டும்
ஓ... மனநலக் காப்பகம்? (645)
தன்மான மனிதர்
எப்பவுமே முயற்சியுடையார்-
தொற்றுத் தாவரங்கள். (646)
தளும்பாத நிறைகுடம்
குடத்தில் மிகச்சிறிய வெடிப்பு-
அடிச்சறுக்கும் யானை. (647)
நிலைப்படுத்தும் பார்வை
தன்வயப்படும்... விரும்பியதும் நடக்கும்
ஆத்மாவின் ஸ்பரிசம். (648)
தண்ணீர்க்குடம் உடைந்தது
ஓடுகளில் எஞ்சியது நீர்-
உண்மை சாவதில்லை. (649)
செம்புலப் பெயல்நீர்போல்
கலக்கும் அன்புடை நெஞ்சங்கள்-
நல்ல மணமக்கள். (550)
வாழ்க்கையின் தத்துவம்,
கூட்டலும் பெருக்கலும் கழித்தலுமாம்
வியாபாரச் சந்தை. (651)
சுகமாகத் தூங்கினேன்
தூக்கத்தில் எறும்பு கடித்தது-
உதட்டோரம் வீக்கம். (652)
சிதறிய ஒருதுளித்தேன்
எங்கு இருந்து வந்தன இவை-
வட்டமிடும் எறும்பு. (653)
புண்ணாக்கெண்ணையாய்
நிலக்கடலையைப் பிரித்தெடுத்தேன்
ஓ... மூலக்கூறுகள். (654)
சகாராப் பாலைவனம்
இந்தியாவில் நிறைந்திருக்கின்றன-
ஏழையரின் 'நாக்கு'. (655)
கோடைக்காலத்தில்
பழுத்த இலைகள் உதிர்ந்துவிட்டன-
அடுத்து வளரும் 'துளிர்'. (656)
உயர்ந்த தென்னைமரம்
பூமியைப் பார்த்து சிரிக்கின்றது
வீட்டைப் பெருக்கும் 'கை'? (657)
கை சுத்தமானாலும்
நகத்திற்கு இடையே அழுக்கு-
எண்ணையோடு திரி. (658)
கூட்டுதலும் கழித்தலும்
பின் பெருக்குதலும் பொதுவானவை-
வாழ்வின் தத்துவங்கள். (659)
ஒரே நிறத்தில் இரத்தம்
எண்ணங்கள் மட்டும் வேறு
சாதிச் சமுதாயம். (660)
குப்பையானாலும்
நீண்ட வரலாறு பேசும்-
மக்களாட்சி நாடு. (661)
காற்றின் திசையில் தான்
இலைகள் உதிர்ந்துதிர்ந்து போகும்-
அலைபாயும் கண்கள். (662)
உணவு உள்ளவரை
அசைபோட்டுக் கொண்டே இருக்கும்...
பாலைவன ஊர்தி. (663)
காலில் புதுச்செருப்பு
நாட்பட்ட, பாத அடிச்சுவடுகள்-
நினைவுச் சின்னங்கள். (664)
காட்டிலும் பிரச்சனைகள்
சருகுகள் எருவாய் ஆவதற்கு-
வானம் பொய்த்துவிட்டது. (665)
ஆண்டுக்கு ஒருமுறை
குடிபெயரும் அணைக்கரை வாசிகள்
நிரந்தர மின்னல்கள். (666)
கழித்ததை உண்டாலும்
மறவாமல் நன்றி கூறும்-
பிணத்தின் மீது 'ஈ'. (667)
கயிற்றின் முனையில் கல்
அதிவேகமாகச் சுழலுகின்றது-
தனக்குள் ஒரு வட்டம். (668)
ஒதுக்கப்பட்டவர்களால்
எழும் வானுயரக் கோபுரங்கள்
தொலைதூர 'தரிசனம்'. (669)
கண்ணகிச் சிலை அருகே
கரித்துண்டின் சிதறல்கள்; அட...
கணக்கு எழுதும் கை. (670)
ஒவ்வொன்றாய்ச் சேர்ந்தது
குளியலறையில் தலைமுடிகள்-
தேங்கிவிட்டது 'தண்ணீர்'. (671)
தேக்கு நேர் ஆக
பக்கக் கிளைகளைக் களையவேண்டும்
ஊருடன் கூடி வாழ்? (672)
என்ன ஆச்சர்யம்
சாக்கடையில் நல்ல தண்ணீர்-
பன்னீர் போட்ட 'முகம்'. (673)
எழுதவே பேசும்கோல்
எழுதியதும் பேசாதிருக்குமா?
திருமணத்தில் பெற்றோர். (674)
வேகம் விவேகமல்ல
மருத்துவமனையில் உபதேசம்
குலை தள்ளிய வாழை. (675)
எத்தனை பூவிலெல்லாம்
தேனைச் சேர்க்கின்றன தேனீ-
அமாவாசை இரவு? (676)
எங்கோ இடி-மின்னல்
இங்கு என்ன சலசலப்பு?
உணர்வின் அலைவரிசை. (677)
வெற்று வாளிக்குள்
குழாய்நீர் வேகமாய்க் கொட்டுகிறது
அட... அரை வேக்காடு. (678)
ஊசி முனைப்பந்து
வேகமாய்ச் சுழலுகின்றது; அடடே...
மதிலின் மேல் பூனை. (679)
உயர் மனிதனாகட்டும்
அச்சாணி சிறு இதயம்தான்-
ஆலமரத்து 'வேர்'. (680)
சுவற்றில் கடிகாரம்
இயங்கிக்கொண்டு இருக்கின்றது
உற்றுக்கேள் 'சத்தம்'. (681)
உதிரிக் காகிதங்கள்
காற்றின் கையில் சிக்கவில்லை-
மதிலோரம் குப்பை. (682)
இன்சொற்களில் மட்டுமா
கலந்திருக்கும் மணிப்பிரவாளம்?
வானத்தில் இடி-மின்னல். (683)
களை எடுக்காத பயிர்
மகசூல் குறைவாகவே இருக்கும்
ஊழல் அமைச்சரவை. (684)
இராப்பகல் போராடி
இரவில் பெற்றுவிட்டோம் சுதந்திரம்-
கல்லறையில் தியாகி? (685)
இரவல் புத்தகத்தில்
என்னுடைய அடித்தல் திருத்தல்-
தீர்ப்புகள் திருத்தப்படும். (686)
நகரக் குடியிருப்பில்
சாதிப் பாகுபாடு இல்லை
அரசியல் 'சமத்துவபுரம்'. (687)
ஆர்ப்பாட்டக்காரன்
பேருந்தில் அமைதி காத்தான்-
பின்னால் அமர்ந்தவள் 'பெண்'.(688)
அறிவூட்டும் கத்தி
துருபிடித்திருக்கிறதே; அடடே...
ஏங்கும் சாணைக்கல். (689)
எழுதாமல் எழுதுகோல்
காதல் சின்னமாய் மரப்பெட்டியில்
காதல் அழிவதில்லை. (690)
அழகை ரசிக்கவேண்டும்
என்கிற ஆதங்கம்; பாவம்-
உதிர்கின்ற மலர்கள்? (691)
அமைதியாக இருந்து
எவ்வளவு சுமைகள் சுமக்கும்?
கொந்தளிப்பில் 'நடுக்கடல்'. (692)
மார்கழி மாதப்பனி
வறண்ட நிலங்களுக்கு ஆறுதல்
பாலைவனப் பூங்கா. (693)
அட்சய பாத்திரத்தால்
யாருமே வேலை செய்யவில்லை-
காஞ்சிபுரத்தில் 'கால்'. (694)
தரணிக்கு விளக்காய்த்
தாய்க்கவியாய் ஏற்றம் தருமே-
அட... ஐக்கூ ஆயிரம். (695)
வேகமாகச் சென்றேன்
வானத்தை உற்று நோக்கினேன்-
விழுந்ததுவே 'நிலவு'. (696)
ஒன்றிவிட்ட இருமனம்
சமாதானத்தில் ஜாதிப்புறா
மண்ணுக்குள் 'சோதிடம்'. (697)
விலை பேசும் மக்கள்
குறைத்தே மதிப்பிடுகின்றனர்;-அட
விலை ஏற்றத்தில் 'பெண்'. (698)
பொழுது புலர்ந்ததுவம்
இருட்டறையில் வெளிச்சம்;-அடடே
சங்கடத்தில் 'மேலோர்'. (699)
பரபரப்பில் மாணவர்
அடடே... தேர்வு தொடங்கிவிட்டது
பெட்டிக்குள் 'பாம்பு'. (700)
இரவெல்லாம் காவல்
திருடனை எப்போதும் பிடிப்பதில்லை-
வீணாய்த் தெருவிளக்கு. (701)
நிழலல்ல உண்மை
துன்பம் மறக்கும் இன்பம் எது?
குழந்தையின் சிரிப்பு. (702)
திறக்கப்பட்டது அணை
சீரிப் பாய்ந்தது வெள்ளம்...அட!
திருந்திய சமுதாயம். (703)
சொந்தங்களைத் துறந்து
பந்தங்களுக்காக வாழ்பவள்...
சொந்தபந்தம் = மனைவி. (704)
சுடரோட்ட வீரர்
ஊரெல்லாம் வரவேற்பு... அட!
மந்திரி கையில் சுடர். (705)
தொலைத்துவிட்ட இடத்தில்
தொலைந்ததைத்தான் தேடினேன்
கிடைத்தது மாற்றுப்பொருள். (706)
கால்வலிக்கத் தேடினேன்
தொலைத்தது கிடைக்கவில்லை
மாறிப்போனது "மனம்". (707)
மனம் விரிந்து பறந்தது
உலகம் யாவும் பொதுவுடைமை
இலேசானது நெஞ்சம். (708)
அறுவடைக்குத் தயாராய்
தலைகுனிந்து நிற்கின்றது நெல்...
தாகம் தீர்த்த மழை. (709)
வீதியில் நடந்தவர்கள்
பாதுகாப்பாக வீட்டிற்குள்...
குரங்கின் படையெடுப்பு. (711)
வீரன் அடையாளம்
தமிழர்களின் விளையாட்டுக்கள்.
அட... ஜல்லிக்கட்டு? (712)
மனிதன் தனக்காக
போட்டுக்கொண்டது சட்டம். அட....
மாடுபிடி ஆட்டம். (713)
அழகாய்க் கொலுசு ஒலி
கூட்டுச் சேர்த்துக்கொண்டது...அட...
மணப்பெண்ணிடம் 'மெட்டி'. (714)
கோபம் வரவில்லை
சீட்டைக் கிழித்து விட்டார்
பேருந்து நடத்துனர். (715)
செம்புலப் பெயர்நீர்போல்
கலந்த அன்புடை நெஞ்சங்கள்
கோவைமணி சாந்தி (716)
இடுப்பில் சுருக்குப்பை
பத்திரமாகப் பார்க்கிறது
அட… கீரைக்காசு. (717)
மரவெட்டியான் கோடரி
மரத்தை மட்டும் வெட்டுகிறது
பாவமாய் தரையில் கனி. (718)
மண்டப நுழைவாயில்
பேதமில்லாமல் வரவேற்கும்
நெகிழிப் பொம்மைகள். (719)
தெருவோரமாய் ஓவியம்
சில்லரை ரசிகனாக ஓவியன்?
ரசிக்காத ரசிகர். (720)
அழவும் முடியவில்லை
அழகான உதட்டுச் சாயம்
வீதியில் திருநங்கை. (721)
எல்லை தாண்டாமல்
மேய்ந்துகொண்டிருக்கிறது ஆடு-
தூணில் கழுத்து நாண். (722)
நேற்றைய மலர்தான்
சந்தையில் இன்று அமோகம்-
வியாபாரியின் யுக்தி. (723)
இளைஞர் பட்டாளம்
ஏக்கம் நிறைந்த வரிசையில்…
அட… இளவட்டக் கல். (724)
காய்ந்துதிர்ந்த சருகுகள்
அவ்வப்போது திசைமாறும்-
சூறாவளிக் காற்று. (725)
ஒத்திகை முடிந்தவுடன்
அரங்கம் அதிர ஆடுகிறாள்-
முழுநிலா அரங்கேற்றம். (726)
சாலையோரத்தில்
தினந்தினம் இன்னிசைக் கச்சேரி-
அட்சய பாத்திரம் பாழ். (727)
சில்லரை காசுக்காக
சாலையோரம் தவமிருப்பான்-
கரித்துண்டு ஓவியன். (728)
கோஷ்டி பூசல்களால்
ஒத்தியொத்தி வைக்கப்பட்டது-
அட… அமைதிப் பேரணி. (729)
மலையகத்தின் இரத்தம்
உலகெங்கும் இரத்த ஆறு-
சிரிக்கிறது தேயிலை. (730)
நொடிப்பொழுது பெருமழை
அனைத்து இன மதங்களும் சங்கமம்-
பரமபத வாழ்க்கை. (731)
பெருமழை வெள்ளத்தில்
யாருக்கும் தள்ளுபடியில்லை-
அரசனும் ஆண்டியாக. (732)
விழுதுகளை நம்பி
கிளைகளை விட்டது ஆலமரம்-
பாவம், ஆலம் வேர். (733)
சுத்தமாய் வந்த நீர்
குப்பையாய் மீண்டு செல்லும்-
தத்திவரும் வெள்ளலை. (734)
அடர்த்தியான காடு
கோலாகல இசைக்கச்சேரி
சருகுகளின் ஓசை. (735)
ஏழைக் குடிசையில்
நிறைவான கொண்டாட்டங்கள்
நடை பழகும் குழந்தை. (736)
தூளியிலே அழுகை
தாழிட்டது கோபச்சேவல் –
தாலாட்டும் அத்தை. (737)
காளையின் திமில்
கை மாறும் வெற்றிக் கோப்பை-
கண் கொத்திப் பாம்பு. (738)
வேர்களை நம்பாமல்
விழுதுகள் ஊன்றும் ஆலமரம்-
விழுதெல்லாம் வேர்களா? (739)
வரிசை மாறியதால்
நேராய்க் கடிக்கும் கட்டெறும்பு –
அட… சுரங்கப் பாதை. (740)
காற்றில் பூவாசம்
வீடே குதூகலத்தில் இருக்கும்-
பூந்தோட்டக்காரன்? (741)
போர்க்களமானதுக்கு
யாரும் எதிர்த்துப் பேசவில்லை-
ஏறுதழுவும் காளை. (742)
குளத்துப் படிக்கட்டில்
பசியாற்றிக் கொண்டிருக்கிறது-
பசியாற்றும் மீன்கள். (743)
வாடைக் காற்றின் சுகம்
எங்கும் சந்தனம் மணக்கிறது-
அட… புதுமனை புகுவிழா. (744)
தளர்வோடு சென்றாள்
புத்துணர்ச்சியூட்டிய அன்னதானம்-
கருவறைக் கடவுள் யார்? (745)
குடிசையின் ஓரம்
ஓரக்கண்களில் வலிக்கோடுகள்-
பசிக்காய் - பட்டது மரம். (746)
வளர்த்த கடனுக்கு
கேசாதி - பாதாதி கேசமாய் –
அஞ்சலிக்கும் உதிர்பூ. (747)
கழித்த பொருளெல்லாம்
ஏழைக்குக் கூட்டலாகிறது-
தள்ளுபடி விற்பனை. (748)
ஊருக்குள் படகு
அடர்ந்த பெருமழையின் கோபம் –
ஒன்றானது மதங்கள். (749)
காட்சிப் பொருளாகத்
தொலைவில் பேருந்து
நிலையம்-
அண்ணாமலை தீபம். (750)
கருத்துகள்
கருத்துரையிடுக