கோவைப் பூ (101-125)

 ஒதுக்கி வைத்தாலும்

வீட்டினுள் நுழைந்து விளையாடும்

சுழற்காற்றில் 'குப்பை'.            (101)

 

நற்காலைவானின்

அலங்காரமான நிறப்பாசிகள்-

மேகத்திட்டுகள்.                       (102)

 

ஓடுகின்ற வண்டியில்

ஓடிக்கொண்டிருக்கிறது மனம்

தொலைக்காட்சிப் பெட்டி.      (103)

 

தேவையெல்லாம் முடிந்ததும்

தனித்துவிடப்படுவதில்லையே-

பெட்டிக்குள் பென்சில்.            (104)

 

மோகம் என்பதெல்லாம்

அதன் பொருண்மையில் இருக்கின்றது-

மனத்தளவே வாழ்வு.               (105)

 

தேனீக்கள் கூட்டமாய்ப்

பறந்து வந்தது - ஏமாற்றம்

கிளையில் காகிதப் பூ.             (106)

 

ஓடையின் ஓரம்

ஓடங்கள்தான் மிதக்கின்றன

ஓரக்கண்ணில் நீர்.                   (107)

 

தூரத்து இருளில்

மகிழ்ச்சியாக ஒலியும்-ஒளியும்

எதிரிகளின் முகவரி?               (108)

 

கண் தூங்குவதற்கு

இறுக்கமாய் மூடிக்கொண்டது இமை

நிலத்திற்குள் 'மண்புழு'.           (109)

 

தெறிக்கும் மழைத்துளிகள்

முள் நுனியில் வழிந்துபோகின்றன-

தற்கொலையின் ஊர்வலம்.    (110)

 

நிமிர்ந்து நிற்கும் புல்

நுனியில் ஒளிரும் பனித்துளி. அட....

எங்கும் சூரியன்கள்.                 (111)

 

துரியோதனர்களாயிரம்

மீளா உறக்கத்தில் கண்ணன்-

பாவம், திரௌபதிகள்.             (112)

 

கண்வழிப்படும் காதல்

காகிதத்தில் கொண்டுவந்தேன்

ஆழமான காவியம்.                 (113)

 

துளிரும் பசும் இலைகள்

காலத்தோடு உதிர்ந்துதிரும்-

உயர் மானிடப் பிறவிகள்.      (114)

 

கரையானின் வீட்டில்

வாழ்கின்றதே பாம்பு; அடடா

இருளுக்குள் விளக்கு.              (115)

 

திரைக்கோழி கூவும்

பொழுது புலர வேண்டாமே-

அரசியல் மன்னர்கள்?             (116)

 

மாடியின் விளக்கெல்லாம்

அணைந்தால்தான் குடிசைக்குள் ஒளி-

யானையுண் விளாங்கனி.       (117)

 

திரைப்படக் கதைகள்

சிந்திக்க வேண்டியவைகளே-

வெறும்பால் தயிராகுமா?       (118)

 

கல் போட்ட காகம்

குடத்தில் நிச்சயம் நீர் எடுக்கும்

தேர்வெழுதும் மாணவன்.       (119)

 

தன்னுருவில் படங்கள்

எதுவுமே பேசுவதில்லையே-

மழையே உலகின் உயிர்.        (120)

 

கள்ளிச் செடியில் முள்

சிக்கிக்கொண்டது நல்லாடை

பதில்சொல்லும் 'ஊழ்வினை'. (121)

 

தாய்மை துடிக்கிறது

அணிசெய்கிறது குரவின் பூ-

கண்களில் பன்னீர்த்துளி.        (122)

 

பார்வைக்குள் கோலம்

வேர்வைக்குள் கவிதை. அடடே....

வற்றிய 'கானல்நீர்'.                 (123)

 

தறியில் நெய்தாலும்

துணிக்குக் குறியீடு அவசியம்-

ஆற்றிலும் அளந்துபோடு.       (124)

 

கனவுப் பல்லக்கில்

நினைவோட பெரும்போராட்டம்

காற்றின் கைகளில் 'நான்'.      (125)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)

கோவைப் பூ (126-150)