கோவைப் பூ (151-175)

 

கொக்கரிக்கும் தவளை

பாம்பின் உல்லாச வாழ்க்கை-

மகிழ்ச்சியின் ஊடுருவல்.         (151)

 

குனிந்து நிமிர்கின்றது

கொத்துக்கொத்தாய் அவரைக்காய்

இரும்பு உருக்காலை.                  (152)

 

கூட்டு வாழ்க்கையில்

குதூகலம் ஆரோகனம்; அடடா!

தனிமையில் 'ஞானம்'.             (153)

 

கூர்மையான கத்தி

விளிம்பில் இரத்தக்கரை; அடடே...

சிரிக்கும் சாணைக்கல்.            (154)

 

கூர் மழுங்கிய கத்தி

பட்டை தீட்டப்படுகிறது-

அந்திக் கதிர்வீச்சு.                   (155)

 

தொடர்ந்து கல் எறிந்தேன்

ஏமாற்றம், பொறுமையாக....

அடடே.... விழுந்தது 'கனி'.     (156)

 

குப்பையை மட்டுமா?

தானியக் குவியலையும் சிதைக்கும்-

இரைதேடும் கோழி.                (157)

 

கூவக்கரை வீடு

தினமொரு அலங்காரம் காணும்

அதிகாரிகள் பேச்சு.                 (158)

 

குறுக்கிடாமல் இருக்க

பாதை, நடுவில் தடுப்புக்கம்பி-

அடியில் வளரும் செடி.            (159)

 

கொடியில் மணக்கும்மலர்

காற்றால் காற்றும் மணக்கின்றதே

நாற்றாகும் 'பெண்கள்'.            (160)

 

கிணற்றுக்குள் தவளை

எவ்வளவு தூரம் நீந்தும்?

அட... கொட்டைக்குள் விதை.(161)

 

மயக்கும் வண்ணத்தில்

அட்டையில் சித்திரம், உள்ளே-

அழுகின்றது 'செந்தமிழ்'.         (162)

 

கிளையில் குதித்தது அணில்

எத்தனை இலைகள் சுமையிறக்கின-

மண்ணில் பன்னீர்த்துளி.        (163)

 

கொதிக்கின்ற நீரில்

அரிசியின் கொந்தளிப்பு, ஆவியாய்-

குடிசைப் போராட்டம்.            (164)

 

காலில் முள் குத்த

மூளையில் மின்னல் பறக்கும்-

வதந்திகளின் வேகம்.              (165)

 

சந்தனமரக்காடு

அகில் எரிக்க, சந்தனம் வீசும்-

பூவொடு சேர்ந்த நார்.             (166)

 

காலிற்கு உணவைத்

தலையின் கிரீடம் கொடுக்கும்-

உரமாய் நிற்கும் சுவர்.             (167)

 

வேர்க்கும் நிலத்திற்கு

வானம் அழுதேயாகவேண்டும்-

முரண்பாட்டு வாழ்க்கை.         (168)

 

காதில் கேளாஒலி

எனக்கு மட்டுமெப்படி கேட்டது?

எனக்குள் 'மனசாட்சி'.              (169)

 

சமுதாயக் கைகளில்

சத்தியாக்கிரகத் துப்பாக்கி-

எறும்பைச் சுடுவதற்கு.            (170)

 

காப்பாற்ற வேண்டும்

ஆபத்தான உண்மைகள்-

பாவம், சிறைக்கைதிகள்.         (171)

 

சாலையில் விழுதுகள்

அவதிப்படுமே பேருந்து-

ஆலமரத்தரசியல்.                     (172)

 

கழுத்திலே மாங்கல்யம்

வெண்ணாடை எதற்கு உடுக்கிறாள்?

ஓ... பிள்ளைத்தாய்ச்சி.             (173)

 

பாதம் குத்திய முள்

முறைதவறி செல்லும்போது-

கைக்குள் சிறைபடுமா?           (174)

 

களைகின்ற சுவடுகள்

இளவேனிற் காலம்; பாவம்....

மணல், என்ன செய்யும்?         (175)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)