கோவைப் பூ (176-200)

 சாலையைப் பார்த்தா

விழுதுகளின் வீரியம்; அடடா!                   

நாட்டில் மக்களாட்சி.               (176)

 

கரங்களில் கடிகாரம்

எல்லாமும் நேரத்தைக் காட்டும்

உப்பில்லா பண்டம்?               (177)

 

சிவக்கும் தாம்பூலம்

தெருவில் துப்பிச் செல்கின்றான்-

கண்ணகி விழிக்கவில்லை.      (178)

 

கருப்பாக இருந்தாள்

மனைவியாக ஏற்க மறுத்தேன்-

சுட்டது அகல்விளக்கு.             (179)

 

கவிதையில் அமர்ந்தது 'நிலா'

எல்லோரும் புகழ்ந்தே பாடுவர்-

கவிதைக்குள்ளே 'நான்'.          (180)

கண்ணாடிக் கடையும்

புயலில் அகப்பட்டுக்கொண்டது-

கோட்டைக் காவல்?                (181)

 

சிறிது நேரந்தான்

மூக்கைத் துளைத்தது துர்நாற்றம்-

நாவினாற் சுட்ட வடு?             (182)

 

கண்ணாடிப் பெட்டியில்

அலங்காரமாய் வீற்றிருக்கின்றது-

நமைச்சுமக்கும் செருப்பு.         (183)

 

செடி கொடி மரங்களென்று

எதிலும் வேறுபாடு இல்லை-

மனிதரில் இனக்கலப்பு?          (184)

 

ஒற்றுமையாய் வானம்

மகிழ்ச்சியோடு மண்ணில் வெள்ளம்-

பாவம், மண்-மணலாய்.           (185)

 

மேகத் திட்டுக்குள்

மோகத் திரைகள் சிரிக்கின்றன-

விலைபேசும் 'அடுப்பு'.            (186)

 

ஒன்பான் சுவை ஒன்றில்

இனிக்க இனிக்க உறவாடும்-

பிள்ளைத்தமிழ்ப் பாட்டு.         (187)

 

செடியில் பழுத்த பழம்

இனிக்கவே நித்தம் துடிதுடிக்கும்-

இல்வாழ்வில் 'மனைவி'.          (188)

 

ஏர்-கலப்பையா என்?

எறும்பின் சிறுகால்கள்; அடடே...

முயற்சியில் புரளுமே 'மண்'.    (189)

 

சேற்றிலே வாழ்ந்தாலும்

தாமரைதானே தேசியமலர்-

சிப்பிக்குள் முத்து.                    (190)

 

ஏழு வண்ணங்கள்

வானத்து வெண்மைக்குள்; அட...

பெண்மையின் குணக்குன்றுகள்? (191)

 

வெறுக்கத்தக்கவைதான்

ஒதுக்கினும் ஒதுங்கவில்லை, அடடா!

உடம்போடு 'அழுக்கு'.             (192)

 

எழுதாத எழுதுகோல்

ஊற்றிய மை தீர்ந்துபோனது-

காற்றில் அதன் எழுத்து?         (193)

 

சேற்றிலே வாழ்ந்தாலும்

தாமரைதானே தேசியமலர்-

ஓ... காகிதப் பூக்கள்?               (194)

 

எழுதி முடிந்தவுடன்

தீர்ப்பு கிடைத்துவிடுவதில்லை-

விடைகொடுக்கும் விமர்சனம்.(195)

 

தலைவர் வந்துவிட்டார்

பூமாலைகள் அணிசெய்தன-

குப்பையில் மாலை.                 (196)

எத்தனை முறை படித்தேன்

புரியவில்லை, என்ன செய்வது?

கிழிந்ததே நல்லபுத்தகம்.         (197)

 

நிர்வாணத் தறிகள்

தரணி எங்கும் பிரவாகம்-

நெசவாளியின் 'அடுப்பு'?        (198)

 

எப்படி இருந்தாலும்

உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும்-

சந்நியாசித் தவளை.                 (199)

 

தலைவிரித்த தென்னை

வாழ்விழந்து பட்டுபோனது-

பெண் கையில் துடைப்பம்.     (200)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)