கோவைப் பூ (26-50)

 மேகப் புத்தகத்தில்

சோகத்தைப் படிக்கும் காற்று-

கண்ணீர் வடித்தால் 'மழை'.    (026)

 

கதவைத் திறந்துவிட்டேன்

வெளியில் இடியும் மின்னலும்... அட-

மனைவி இல்லாத குறை.        (027)

 

மேனித் தடாகத்தில்

மீனின் நல்வரவுப் பலகை-

திருமண அழைப்பு இதழ்.        (028)

         

பசுமையான இலைகள்

பிழியப்பிழிய சொட்டும் நீர்-

உன்னத 'ஐக்கூ'க்கள்.              (029)

 

முள்ளில் சிக்கிய துணி

பாதுகாப்பாய் எடுக்கமுயன்றேன்-

விரலைக் குத்தும் முள்.            (030)

 

முள் குத்தும்போது

எருக்கம் சிலதுளி பால் வடிக்கும்-

துக்கத்து 'வீடு'.                         (031)

 

முள்ளில் சிக்கும் குடை

அல்லல்பட்டது கை; அடடே...

கடைசியில் குடைக்குள் வான்.(032)

 

ஆண்களின் சரணாலயம்

மாநகர்ப் பெண்கள் கல்லூரி

காட்டுத் தேன்கூடு.                  (033)

 

முடிந்துக்கொள்ளலாம் என

மிதிலை, இராமனைப் பார்க்கின்றது-

பாவம், சனகன் வில்?              (034)

 

இதுவரை மகிழ்ந்தது அவள்

இனிமேல் மகிழப்போவது அது

கழுத்தில் மங்கல நாண்.          (035)

 

முடிவைப் பார்த்துவிட்டு

முன்னதைத் தேடிக்கொண்டிருக்கும்-

திரையரங்கில் துடைப்பம்.      (036)

 

உழுத நிலத்தின்மேல்

அழுத்தி நடந்த பாதங்கள்-

பூமிக்கடியில் விதை?               (037)

 

மாணிக்கக் கற்கள்

ஒளியில் மட்டுமா ஒளிர்கிறது-

சிவன் தலையில் பாம்பு.          (038)

 

இரகசியப் பூக்காடு

மகிழ்வூட்டுகின்ற இராகமாளிகை

துள்ளியழும் குழந்தை.             (039)

 

மாதவி நடனத்தால்

கோவும் பொன்னும் பரிசாயின-

கண்ணகி மகள் மேகலை.       (040)

 

இரவுப் பயணத்தை

எதிர்க்கின்றன மின்மினிப்பூச்சிகள்

வேகமாய்ப் பேருந்து.              (041)

 

மலடிக்குக் குழந்தை

சட்டசபைக்குள் வெள்ளைப் புறா?

பாலைவனப் பூக்கள்.               (042)

 

அழகாய்த்தான் இருந்தது

வாசலில் வண்ணக் கோலம், அட...

வானத்தில் 'மேகம்'.                 (043)

 

மலர்க் கண்ணில்  நீர்த்துளி

எதையெல்லாம் சுமப்பார் பெண்கள்-

ஐம்பூதத்துள் நிலம்.                  (044)

 

இரவெல்லாம் ஆட்டம்

பகலெல்லாம் வாட்டம்; அடடா!

மரப்பொந்தில் 'ஆந்தை'.          (045)

 

பொய்களின் ஊர்வலத்தில்

உண்மைகள் விலைபேசப்படும்-

நீதிக்குத் தண்டனை.                (046)

 

இருள் உண்ட சூரியன்

இவர்களை உண்ண வருவானோ?

இருண்ட மனிதர்கள்.               (047)

 

பொறுத்தால் பெறமுடியும்

ஆத்திரக்காரனுக்கு புத்தி?

வற்றிய கிணற்றில் நீர்.            (048)

 

விலைவாசி ஏற்றம்

வரைபடத்தில் மட்டும் வீடு

வாழ்க 'மணல்வீடு'.                  (049)

 

பூவின் மேல் புழுதி

காற்றின் போக்கிரித்தனம்; அடடே...

மழையில் குளித்ததே பூ.          (050)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)