கோவைப் பூ (326-350)

 மையக் காட்டில் மழை

காடு கடலாய் மாறும்-

செல்வத்துட் செல்வம்.             (326)

 

முன்னரே மதிப்பிட்டதை

மறுமதிப்பும் செய்கின்றோம்; ஓ...

உதிரி பாகங்கள்.                      (327)

 

இருளில் வெண்ணாடை

நிறம் மாறாமல் தெரிகிறது

வெளிச்சத்தில் மட்டும்?           (328)

 

முதலுதவிக்காக

பேச்சு வார்த்தை நடக்கிறது-

வியாபார மக்கள்.                     (329)

 

மாலை காலையில்

சுறுசுறுப்பாக இயங்குகின்றது-

பணிக்குப் போகும் 'பை'.         (330)

 

அழுக்குக்குப் பயந்து

நகத்தை ஒட்டவொட்ட வெட்டினேன்

நகப்பொந்தில் 'இரத்தம்'.        (331)

 

மழையுடன் வாழும் பெண்

சிறு பேச்சால் பூகம்ப வெடி-

சிலம்பிடையே மாதவி.            (332)

 

மகரந்தத்தூள்கள்

வண்டுக்காய்க் காத்திருக்கும்; அட...

காற்றின் திருட்டுத்தனம்.         (333)

 

முள் இரண்டும் இணைந்து

ஓடினால்தான் கடிகாரம்; ஓ...

இரு வருவாய்க் 'குடும்பம்'.      (334)

 

பெண்கள் எத்தனைவிதம்

ஒவ்வொருவரிடமும் ஒரு முகவரி-

காட்டுக்குள் மூலிகை.              (335)

 

பூத்தது எருக்கம் பூ

அழகாய், விட்டு வைக்கவில்லை-

பெரியார் பிரச்சாரம்.               (336)

 

பரந்த புல்வெளியில்

தினந்தினமும் நடந்து வந்தேன்

ஒற்றையடிப் பாதை.                (337)

 

புல்லின் வைரத்தலை

பனித்துளி மட்டுமா தருகின்றது?

செடிக்குப் பாய்ச்சும் நீர்.         (338)

 

பீதாம்பரம் வீசும்

கன்னிப்பெண் - நெஞ்சக்குமுறல்

ஓ... புழுங்கல் அரிசி.                (339)

 

உய்வித்துண்பாரும்

உய்த்துண்பாரும் பயனடைவர்

பாவம், 'தினக்கூலிகள்'.           (340)

 

பாத அடிச்சுவடு

புதுச்செருப்பில் நன்றாய்த்தெரியும்-

புதுமனைவி கோலம்.              (341)

 

பலநாள் பற்பலமுறை

பாறைமீது நடந்துவந்தேன்-

என்பாதச் சுவடுகள்.                (342)

 

மிகப்பெரிய குளம்

ஊருக்குள் சாதி வெறிப்பேய்கள்

குளிக்கின்றது 'எருமை'.           (343)

 

பணிவதே பெருமையென

வயலில் குனியும் நெற்கதிர்கள்-

உலையில் நிமிரவேண்டும்.    (344)

 

நொண்டி வண்டுக்கு

எல்லா மலர் மீதும் ஆசை-

அக்கரையில் குறிஞ்சி.             (345)

 

ஆடம்பர வாழ்க்கை

வரவுக்கு மேலே செலவு

நெய்விளக்கில் 'விட்டில்'.         (346)

 

நுனியை மேய்ந்ததாடு

அடியோடு வாடியதே செடி-

அரசியல் தலைவர்கள்.            (347)

 

நீருக்குள் நிலவு

இறங்கித் தேடினேன்; காணவில்லை-

தலைக்குமேலே நிலவு.            (348)

 

உயரே வளர்ந்தாலும்

மண்ணுக்கு நிழலைத்தரும் 'மரம்'

நாடோடி 'வீடு'.                        (349)

 

நிறைய பனை, தென்னை

இதமாய இருந்தது கோடை-

மதுவுண்ட வண்டு.                  (350)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)

கோவைப் பூ (101-125)