கோவைப் பூ (351-375)

 நிலா முற்றத்தில் நெல்

நிலவில் காய வைப்பதில்லை-

முரண்பாட்டு வாழ்க்கை.         (351)

 

உருண்டையாய் உலகம்

பரந்த கடல்நீர் வழிவதில்லை

திருத்தொண்டர் 'அன்பு'.         (352)

 

நிமிராத நாய்வால்

நிமிர்த்தினாலும் சுருட்டிக்கொள்ளும்-

மலரோடு சேர்ந்த நார்.            (353)

 

நற்கொழுமுகை உடைந்து

திணிநிலைக் கோங்கம் அணிசெய்தது-

வண்டு வரவில்லை.                 (354)

 

நிலத்திற்குள்ளதுபோல்

மனிதனுக்கும் உண்டு பட்டா

அடடே.... வரதட்சணை.         (355)

 

தேனுள்ள பூக்கள்

அர்ச்சனைக்குப் பறித்துவிட்டார்கள்-

வண்டின் தவிதவிப்பு.              (356)

 

தென்றலால் மயங்கிய நான்

நினைவு வர வருந்துகின்றேனே-

பறக்கின்றன பூக்கள்.               (357)

 

மலையைத் தொடும் வானம்

தூரத்தில் மண்ணையும் தொடும்

வானம்போல் 'பரம்பொருள்'.  (358)

 

துளிர்த்தது இரண்டு இலை

எத்தனை, முதிர்ந்துகாய்ந்துதிர்ந்தன-

உலகில் மக்கள் தொகை.        (359)

 

தினந்தினங் கைரேகை

பார்த்துப்பார்த்து அலுத்துவிட்டது-

உதட்டில் அட்சரேகை.            (360)

 

ஒருவழிப்பாதையாய்

வானூர்தி செல்லும் பாதை

திக்கற்ற காடு?                         (361)

 

தானாய்ச் செய்யாது

தூண்டுதலே அதன் முதலீடு-

காற்றில் அசையும் இலை.      (362)

 

தனக்குப் பிறர் நாடி

தரணிக்கே உதவி செய்வர்-

சவரத் தொழிலாளி.                 (363)

 

எங்கும் பரந்த புல்

தினந்தினம் தொடர்ந்து நடந்துவந்தேன்

ஒற்றையடிப் பாதை.                (364)

 

தலைக்குமேலே வானம்

நிமிர்ந்து பார்த்து ஏமாந்தேன்-

அட... கீழே நீரிலும்.                (365)

 

சேற்றினுள்ளே எருமை

சுகமாய் வெப்பம் தணிக்கின்றது-

குழம்பியது குட்டை.                (366)

 

சூரியச் சந்திரனின்

அற்புத கோலி விளையாட்டு

அட ... பகலும் இரவும்.           (367)

 

சூறாவளிப் பயணம்

வரலாறு படைக்கப்பட்டது-

ஓ... குடும்பத்தலைவி.              (368)

 

சிரித்துப் போனாளே

வாழ்வதற்கா வழக்கிற்கா; ஓ...

வானில், இடி-மின்னல்.           (369)

 

சூரியகாந்திப் பூ

பொழுதிற்கொப்ப திசைமாறும்

மனிதப் பச்சோந்தி.                  (370)

 

சாணைக்கல் சிரிக்கும்

துருபிடித்த கத்தியைப் பார்த்து-

பட்டை தீட்டிய பின்?              (371)

 

கோழியா? முட்டையா?

சாப்பிடுவது... மனப்போராட்டம்?

உலகத்துள் பரம்பொருள்.       (372)

 

முகத்தில் அரிதாரம்

மேடையில் இருக்கும் வரைதான்

வான் நட்சத்திரங்கள்.              (373)

 

கொஞ்ச நேரந்தான்

மூக்கைத் துளைத்த துர்நாற்றம்-

இரயில் வண்டியில் 'நான்'.      (374)

 

கூர்மை போகவில்லை

போருக்குப் போகாத வாள்-

பாழடைந்த கிணற்றுநீர்.         (375)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)