கோவைப் பூ (451-475)

 சிகரத்தின் உச்சியில்

தோரண அலங்காரங்கள்-

அடிவாரத்தில் 'நான்'.               (451)

 

சீரான எழுதுகோல்

இறுதியில் பிரகாசமாய் எழுதும்-

சாகும் முன் 'ஆன்மா'.              (452)

 

ஒவ்வொரு மேடையிலும்

சமத்துவங்களையே பேசுகின்றனர்

கொல்லைப்புறம் 'வாசல்'.       (453)

 

செடியில் பிறந்தது மலர்

வதங்கினாலோ தானாய் உதிரும்-

ஓ... அழுகிய பலாக்கனி?        (454)

 

சேற்றுத் தாமரைகள்

அர்ச்சனைக்குத் தயாராகின்றன-

குப்பையில் மாணிக்கம்.          (455)

 

வந்த கடிதத்தில்

அனுப்புநர் முகவரி எங்குமில்லை

உலகத்தில் 'பரம்பொருள்'.      (456)

 

தழுவும் பனங்குருத்து

தலைவிரித்தாடும் பனையோலை

காலச் சூழலில் 'நான்'.              (457)

 

தனித்தனி முகவரிகள்

பேதமில்லாத கூட்டுவாழ்க்கை-

மனிதனின் உடற்கூறுகள்?     (458)

 

வெய்யிலில் சுடர்விளக்கு

வெளிச்சத்தைத் தந்தென்ன பயன்?

நீதிமன்ற வழக்குகள்.               (459)

 

திக்கெல்லாம் கண்கள்

கணைகள் ஒருதலையாய் மாறும்-

செய்தி வாசிப்பவள்.                (460)

 

தீர்ந்த கடனுக்கு

சுடுகாட்டில் வட்டிதரும் மகன்-

கொள்ளிக் கட்டைகள்.            (461)

 

அத்திப்பூ மாலை

ஏழையின் கழுத்தில் விழுந்தது.

தேர்தல் வாக்குறுதி?                (462)

 

தூங்காமல் விழித்து

நேராய் வளர்க்கப்பாடுபட்டேன்-

இயல்பாய் வளர்ந்தது 'பனை'.(463)

 

தேயும் கரித்துண்டு

அழிவில்லையென்று சிரிக்கின்றது-

சுவரில் விளம்பரங்கள்.            (464)

 

சட்டசபைக் கலகம்

அடிஉதைக்குப்பின் வெளிநடப்பு

ஓ... பாகப் பிரிவினை.             (465)

 

நகத்தைக் கடித்த பல்

விரலையும் எச்சில் செய்தது-

நகப்பொந்தில் அழுக்கு?         (466)

 

நாளைக்கு என்று

நாள்பட வைத்திருக்க முடியுமா?

நாள்பட்ட கிணற்றுநீர்.            (467)

 

ஒவ்வொரு பூவிலுந்தான்

தேனை உண்ணுகிறது வண்டு

வீட்டிற்குள் 'பரத்தை'?             (468)

 

நிலத்தில் பதுங்கும் புலி

பாய்வதற்குத் தயாராகின்றது-

மின்சாரக் கம்பிகள்?                (469)

 

நிழலைத் தந்த இலை

உதிர்ந்து பட்டமரமாகும்; அட...

இலைக்கு நிழல்தரும் மரம்.     (470)

 

ஏழ்மையின் உதட்டில்

வறுமைக் கோடுகளே அதிகம்

ஏழையின் சிரிப்பு?                   (471)

 

நின்றதோ மின்சாரம்

எல்லாமும் நின்றது; ஆனால்...

அவசர மின்விளக்கு.                (472)

 

நீர் நிரப்பும் தொட்டி

அடியில் சிற்றெறும்பின் முட்டை-

சாக்கடைச் சமுதாயம்.             (473)


இராட்டையில் பருத்தி

நூலானால்தான் தறியில் துணி

தாய்-சேய் நலவிடுதி.               (474)

 

நெஞ்சின் குமுறல்கள்

நெருப்பாய்க் கண்ணீர் வெளிப்பாடு-

பூகம்பத்துள் 'நான்'.                  (475)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)