கோவைப் பூ (476-500)

 பக்திப் பிரதேசம்

எங்கும் மண்டியிட்ட வணக்கம்-

வறுமை சிறைச்சாலை.            (476)

 

கண்ணகியின் சிலம்பு

நெடுஞ்செழியனிடம் பேசியது

நெருப்புக்குள் 'மதுரை'.           (477)

 

பந்தலில் மின்விளக்குகள்

மிகுந்தும் குறைந்தும் ஒளிகாட்டும்-

வான் நட்சத்திரங்கள்.              (478)

 

பலவித எழுத்துக்கள்

புள்ளியே அனைத்தெழுத்திற்கும் முதல்-

ஆத்மாவுள் 'பரம்பொருள்'.      (479)

 

குண்டூசியின் எல்லாப்

பக்கங்களும் முகத்தைக்காட்டும்-

அடடே... 'ஐக்கூ'க்கள்.            (480)

 

காட்டுப் பாதையில்

காற்றடித்தும் விலகாத முள்

வேகமாய்த் தேர்ச்சக்கரம்.       (481)

 

பார்வை குன்றியது

உதவிக்கு வந்தது கண்ணாடி-

தாய்க்குப் பின் தாரம்.              (482)

 

புத்தகத்தைத் திருத்தினேன்

எப்படியோ சரியாகிவிட்டது-

அடித்தல் அழியாது.                 (483)

 

வாசமில்லை எனினும்

வனத்துப் பூக்களிடம் வண்டுகள்

எல்லாப் பூவிலும் 'தேன்'.         (484)

 

புள்ளி வட்டமாகலாம்

ஆரமே வட்டத்தின் மூலம்-

சமுதாயத்தில் 'பெண்'.              (485)

 

பூமிக்குள் விதையை

ஆழமாகப் பதியச்செய்தேன்-

சிரிக்கும் 'தரிசு நிலம்'.              (486)

 

பிரம்மாவா எழுதினான்

வாழ்வின் ஆயுட்காலத்தை

உணர்ச்சியின் சீரமைப்பு.        (487)

 

பேய்க்காற்றில் புழுதி

எத்தனைபேர் கைகள் கண்ணில்-

பாவம், தேன்கூடு.                   (488)

 

மதுவிலக்குச் சட்டம்

முறையாக அமுல்படுத்தப்பட்டது-

கள்ளச் சாராயம்.                      (489)

 

சுவீகார பந்தம்

மக்களுக்கு மட்டுந்தானா?

புலிக்கூண்டில் ஆடு.                (490)

 

மனப்போராட்டம்

உண்பது கோழியா? முட்டையா?

உருண்டையாய் உலகம்.        (491)

 

மின்னலாய் மினுக்கிறது

உறையில் உறங்கும் பாசறைவாள்-

சிரிக்கும் சாணைக்கல்.            (492)

 

தினமும் ஒரு அழைப்பிதழ்

அனுப்பும் கல்லூரி மாணவன்

புத்தகத்தில் காதல்?                 (493)

 

முல்லை வாசமில்லை

என்றாலும் ஒழுக்கத்தின் தலை-

சிரிக்கும்... குறிஞ்சிப் பூ.          (494)

 

மூடியகண் திறந்தது

எங்கும் வெண்மைப் பிரவாகம்-

தண்ணீருக்குள் 'நான்'.             (495)

 

வரிசையாய் எறும்பு

எல்லோரும் பின்பற்றவேண்டும்

சலுகையில் 'பதவி'?                 (496)

 

யார் சொல்லிக்கொடுத்தார்

சேவலுக்கு விடியப்போவதை-

பஞ்சாங்கப் பேய்கள்.              (497)

 

வரிசையாய்ச் செல்லும்

மனிதர்களைக் கண்டு வியந்தேன்-

ஒற்றையடிப் பாதை.                (498)

 

எளிதான வேலை

வெள்ளாடையை அழுக்காக்கல்

அட... விதவை மறுமணம்?     (499)

 

வாழ்கின்றவன் மனிதன்

'உம்' உலகம் வாழ்கிறதாமே-

மனசுக்குள் மனிதன்.                (500)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)