கோவைப் பூ (526-550)

 ஒருதுளித் தேன் சிதற

எங்கு இருந்து வந்தன இவை?

வட்டமிடும் 'எறும்பு'.               (526)

 

கட்சித் தோரணங்கள்

முரசு கொட்டும் கொள்கைகள்-

என்றும் 'பாதசாரி'?                  (527)

 

ஆடு புகாதவாறு

சுற்றிலும் வேலி எழுப்பினார்கள்

வேலி ஓரம் 'தழை'.                   (528)

 

கதை வசனம் இயக்கம்

பாத்திரம் எல்லாமே நாம்தான்-

உலகத்துள் பரம்பொருள்?      (529)

 

கவிஞன் கண்களுக்கு

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்-

வாழ்க, மகாத்மாக்கள்.             (530)

 

தெறிக்கும் மழைத்துளிகள்

முள்ளில் தற்கொலை செய்துகொள்ளும்

பெற்றோர் உபதேசம்.             (531)

 

காட்சிகளைக் கண்டதும்

எழுத்தில் கொடுக்கின்றவன் கவிஞன்-

பாவம், ஆய்வாளன்.                (532)

 

காலில் புதுச்செருப்பு

இன்னுமில்லை பாதச்சுவடு-

வெண்ணிறச் சேலைகள்.        (533)

 

வரப்போரத் தண்ணீர்

வீணாவதால் தென்னை வளர்த்தேன்.

என்... சவலைப்பிள்ளை.         (534)

 

காற்றின் செய்திகளை

உடனுக்குடன் வாசிக்கும்; அட...

முற்றத்தில் தென்னை.             (535)

 

குத்த, வரும் இரத்தம்

அழுக்கையும் சேர்த்தா கொண்டு வரும்

முள் நுனியில் அழுக்கு.            (536)

 

வேகமாக மிதித்தேன்

மிதிவண்டி விரைவாய்ச் சென்றது

நெஞ்சில், முயல்-ஆமை.          (537)

 

கூட்டு வாழ்க்கைதான்

தேசியத்தின் ஒருமைப்பாடு-

தனித்தனி முகவரிகள்.             (538)

 

கைக்குட்டை அழுக்கு

நமக்கே வெறுபபைத் தோற்றுவிக்கும்-

பாவம், சுமைதாங்கி.                (539)

 

வாழ்ந்தவரைப் பார்த்து

வாழ்பவர்கள் அழுகின்றார்கள்

சுடுகாட்டில் 'தோட்டி'.             (540)

 

கொழுந்து விட்டது மரம்

முதிர்வில் காற்றின் பிள்ளையாய்-

அரசியல் தலைவர்கள்.            (541)

 

சமூக அமுதசுரபி

இன்னும் வற்றவில்லை; சுரக்கும்-

நாட்டில் மக்கள்தொகை.         (542)

 

ஓரிடத்தில் அழுத்தினால்

சுடர்விடுகின்ற பல விளக்குகள்-

உன்னத 'ஐக்கூ'க்கள்.              (543)

 

இருகிய கற்றாழை

எண்ணெய்விட்டு இளகாக்கினேன்

வழிகின்றது 'கசடு'.                  (544)

சிதறாத மனதில்

தங்கியிருந்தது கோயில்புறா-

மனம், செம்புலப்பெயல்நீர்.    (545)

 

சீவலில் வலியுண்டாம்

எழுதும்போது இன்பம் தரும்-

பிள்ளைப் பேற்றில் 'தாய்'.       (546)

 

மங்கலாய்த் தெரிவதாலே

கண்ணைக் கசக்கிப் பார்க்கின்றேன்

உச்ச நீதிமன்றம்!                     (547)

 

செத்த பிணத்திற்குப்

பிரச்சாரம் செய்கின்றோம்; அட...

ஒப்பாரிப் பாட்டு.                     (548)

 

தங்கையின் திருமணம்

மகனை விலைக்கு விற்றுவிட்டேன்-

கரம்பு நிலத்தில் நெல்.             (549)

 

உலர்ந்த நூலின் மேல்

தண்ணீரைத் தெளித்து வைத்தேன்

தனியார் காப்பீடு.                    (550)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)