கோவைப் பூ (551-575)

 தழுவும் மனைமட்டை

தலையில் தன்குணம் காட்டுகின்றது-

தலைவிரியாய் மட்டை.           (551)

 

தன்தாள் வணங்காத்தலை

நேரம் வரும்போது குனியும்-

கழுத்தளவே வாயில்.               (552)

 

மொட்டைக் காத்தேன்

பூத்ததும் தேன் எடுத்தது வண்டு

பறந்தது... கூண்டுக்கிளி.         (553)

 

திசை நான்கும் வேதம்

பரம்பொருளே மூல கர்த்தா-

திசைகாட்டும் கருவி.               (554)

 

தும்பிக்குச் சிறகுகள்

பறப்பதற்கு மட்டும் அல்ல-

உலகவொற்றுமைக் கழகம்.    (555)

 

காந்தர்வத் திருமணம்

இன்றளவும் நடைபெறுகின்றது

அனாதை இல்லங்கள்.             (556)

 

தூசு பறக்கவில்லை

ஓ... மழையால் நனைந்த பாதை-

பணிக்குச் செல்லும் பெண்.     (557)

 

தேய்த்து வரும் காலணி

யாரென்று புரிந்துவிட்டது-

புரண்டு நிற்கும் மனம்.            (558)

 

குடிகாரன் பேச்சு

பொழுது விடிந்தால் போச்சு- ஓ...

மாங்கொண்டை 'வண்டு'.       (559)

 

நகல் எடுக்க நினைத்தேன்

நிழல் வந்து மறைத்துக்கொண்டது-

நிஜத்தைக் காணவில்லை.      (560)

 

நாற்றிசையும் வெள்ளம்

நடுவில் ஒரு சிறிய துவாரம்-

பிண்டத்துள் அண்டம்.            (561)

 

இனிக்கும் மாங்கனியை

இறுதிவரைச் சுவைத்துண்டேன்...ஓ

வண்டுக்கு விடுதலை.              (562)

 

நிலத்தைச் சுரண்டும் கை

கரம்பு நிலத்தையும் விடவில்லை-

விரல் நகப்பொந்தில் மண்.     (563)

 

நிழல் தேடிய கால்கள்

உறங்குவதற்கு இடங்கேட்டது-

ஒண்டவந்த பிடாரி.                 (564)

 

பகலில் காய்ந்த தரை

இரவில் வேர்க்கின்றதே; எப்படி?

நெஞ்சக் குமுறல்கள்.               (565)

 

நீக்கியும் நீங்காமல்

பேருந்தில் சமசரம் பேசுவோம்-

பெண்களுக்குத் தனியிடம்?    (566)

 

நீர்ப்படராத தாமரை

நிலம்படத் தானாய் ஒட்டும் மண்-

மனித ஒட்டுண்ணி.                  (567)

 

கடலோடு ஆறு

இரண்டரக் கலந்துவிட்டது; பின்னர்-

மழையாகக் 'கடல்நீர்'.             (568)

 

நெய்விளக்கில் அழியும்

விட்டில் பூச்சிகள் மகிழ்கின்றன-

மூடிய சொர்க்கவாசல்?           (569)

 

பசுமையாய் வளர

பாத்தி கட்டி உரமிட்டேன்-

வேருக்கு 'வெந்நீர்'?                 (570)

 

எதுவுமில்லை என்பதும்

என்னதான் இல்லை என்பதுவமே-

'ஐக்கூ'க் கவிதைகள்.               (571)

 

உடைந்த மோதிரக்கல்

பலவாய்ப் பொலிவுற்று நின்றன

அட... கூட்டுக்குடும்பம்?         (572)

 

பம்பரத்தின் சுழற்சியில்

எத்தனை எத்தனை வட்டங்கள்-

தேர்தல் அறிக்கைகள்.             (573)

 

பலவித வண்ணங்கள்

கூட்டு முயற்சியில் ஒன்றுபட்டன-

சிவக்கும் தாம்பூலம்.                (574)

 

பேருந்துப் பயணம்

சிறுநீரை அடக்கிக்கொண்டேன்

இழவுவீட்டில் 'அழுகை'.          (575)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கோவைப் பூ (101-125)

கோவைப் பூ (ஐக்கூக் கவிதை) (1-750)

கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)