கோவைப்பூ (ஐக்கூக் கவிதை) (751-775)
மலை உச்சியில்
தீபம்
இறைவனின் தெய்வீகக்
காட்சி-
இருளாய், இருட்டின்
ஒளி. (751)
வெள்ள பாதிப்பு
ஆழ்ந்து பார்வையிடும்
பகலவன்-
புதையுண்ட
குடிசை. (752)
வியாபாரிகள்
குமுறல்
கடைவீதி எங்கும்
வெள்ளம்-
வேதனை, இழப்பீடு? (753)
நகருக்கு அருகில்
புதிய பேருந்து
நிலையம்-
பாழாகும் விளைநிலம். (754)
விளம்பரம்
இல்லாத
தரம் உயர்ந்த
அடுக்கு மாடிகள்-
அடுப்பிலணை
“பூனை”. (755)
உறைந்த பனிக்கட்டி
மலை உச்சியிலிருந்து
அருவியாய்-
மகளின் உயிர்
“தாய்ப்பால்”. (756)
கன்னி கழியாப்
பெண்
ஓராயிரம் ஏக்கப்
பார்வை-
சிலம்பு கழி
நோன்பு? (757)
சாதியுடன்
மதமும்
மக்கிச் சாம்பலாகிப்
போனது
அட… தேர்தல்
அறிக்கை. (758)
வாழ்க்கை இனிக்கவேண்டி
கடன் வாங்கிக்
கரும்பு நட்டான்-
கசப்பானது
அறுவடை. (759)
தற்காலிக விடுதலை
மகிழ்ச்சியாய்ச்
சீட்டை எடுத்ததுவே-
அட… சோதிடரின்
கிளி. (760)
மதுக்கடைகள்
அடைப்பு
பின்னால்,
அமோக வியாபாரம்-
காந்தி பிறந்த
நாள். (761)
ஓரிடத்தில்
வளர்ந்தவள்
மறுவிடத்தில்
தேய்கின்றாளே-
நிலவானாலோ
“பெண்”. (762)
ஊர் கூடி இழுத்தாலும்
ஊர்வலம்தான்
நடந்தேறவில்லை-
சேரிக்குள்
சிறுதேர். (763)
பூந்தொட்டி
வயலில்
பூத்துக் குலுங்கும்
காகிதப்பூ -
வண்ணத்துப்
பூச்சி? (764)
தந்தையின்
ஆசை
மகளின் காற்சிலம்பு
மாற்றம்
சிலம்பு கழி
நோன்பு. (765)
நிலத்தின்
புழுதியைச்
சூறைக்காற்று
கவர்ந்துசெல்லும்-
அழுக்குச்
சமுதாயம். (766)
பேய்க்காற்றில்
கூட
மெதுவாய் நகர்கிறது
நத்தை-
அட… கல்லுளி
மங்கன். (767)
காக்கையின்
கூடு
காற்றோட்டமாக
இருக்கிறது-
பாம்பின் குடியிருப்பு. (768)
மரமேறிப் பாம்பு
மரம்விட்டு
மரம் தாவுகிறது-
அரசியல் நாயகர்கள். (769)
கோடை வெயிலுக்கு
இதம் கொடுக்கிறது
வளர்ந்த மரம் –
இளைப்பாறும்
கோடரி. (770)
நதியின் தற்கொலையால்
ஆற்றுப்படுகை
ஆழமானது –
இரவில், மணல்
திருட்டு. (771)
அலங்கார விளம்பரம்
பெருகும் கருத்தரித்தல்
மையம் –
உணவு முறை
மாற்றம். (772)
வற்றிய நீர்
நிலையில்
கொக்கு, கரையில்
காத்திருக்கும் –
விதவை வீட்டில்
- ஆண். (773)
சில்லரை காசுக்காய்
கம்பியில்
நடக்கும் கன்னிப்பெண் –
அந்தரத்தில்
வாழ்க்கை. (774)
பூனைக்குப்
பயந்து
எலிப்பொறிக்குள்
சிக்குண்டது, எலி
வாசலில் நிற்கும்
- நாய். (775)
கருத்துகள்
கருத்துரையிடுக